tamilnadu

மகாராஜபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

சீர்காழி, மே 16-நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த மகாராஜபுரம் ஊராட்சியில் கண்ணுக்கினியனார்கோயில், மெய்யாப்புக்கோட்டகம், குட்டியாண்டிதோப்பு, தேவநல்லூர், மகாராஜபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 3500க்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கண்ணுக்கினியனார் கிராமத்தில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டியிலும், தேவநல்லூரில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலும் கூட்டுகுடிநீர்த் திட்டத்தின் மூலம்வரும் நீர் அழுத்தம் குறைவின் காரணமாக தண்ணீர் தொட்டிகளில் ஏற்றி தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் குட்டியாண்டிதோப்பு கிராமத்தில் புதிதாக 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி 3 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இதுவரை செயல்படாமல் உள்ளது. இதனால் மகாராஜபுரம் ஊராட்சி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தினந்தோறும் காலை மற்றும் வெயிலில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்றுமாதானம், வடபாதி மற்றும் ஆலங்காடு ஆகிய கிராமங்களிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மாவட்ட ஆன்மிகத் தலைவரும், முன்னாள்ஊராட்சித் தலைவருமான பட்டுரோஜா கூறுகையில், மகாராஜபுரம் ஊராட்சியில் கடும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சிறப்பு கவனம் செலுத்தி குடிநீர் பஞ்சத்தைதீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடகால், திருக்கருகாவூர், கீராநல்லூர், கடவாசல், வழுதலைக்குடி, திருமுல்லைவாசல், பழையாறு அளக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களிலும் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளாட்சித் துறை மூலம் சிறப்பு கவனம் செ லுத்தி போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.