tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஜூன்.23- தமிழகத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க அதிமுக அரசு தவறி விட்டதாக கூறி திமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், 'தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் என்பது செயற்கையானது. தஞ்சையில் அகழிகளுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் 38 ஏக்கர் பரப்பிலுள்ள ஏரி குளங்களை நிரப்பலாம். கேரள அரசு தண்ணீர் தர முன்வந்த போதும், வேண்டாம் என மறுத்து விட்டனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்காத அரசு, ஸ்மார்ட் சிட்டிக்கு முக்கியத்துவம் தருகிறது என்றார். திமுக தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் பனகல் கட்டிடம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றார்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.என்.எம். உபயதுல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரத்தநாடு ராமச்சந்திரன், கும்பகோணம் அன்பழகன், திருவிடைமருதூர் கோவி.செழியன், தஞ்சை டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார். காலிக் குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதே போல் நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க. நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், திமுக.விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட அவைத்தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.இராஜேந்திரன், இல.மேகநாதன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.வி.காமராஜ், கீழையூர் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வாஎடிசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.