தூத்துக்குடி, ஏப்.24-தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாலை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இரவு நேரத்திலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த சூறைக்காற்றுக்கு கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் பல விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. அப்பகுதி நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகளும் சூறைக்காற்றுக்கு சேதமடைந்துள்ளன.இதே போன்று செட்டிகுறிச்சி குறு வட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இளையரசனேந்தல் அருகில் உள்ள ஜமீன் தேவர்குளம், பிள்ளையார்நத்தம், ஆண்டிபட்டி, வெங்கடாசலபுரம் சுற்று வட்டாரப் பகுதியிலும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஏற்கனவே சரியான பருவமழை இல்லாத காரணத்தினால் இருக்கும் தண்ணீரை கொண்டு வாழை பயிரிட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து மரங்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கு உரிய நிவாரணம் வழங்கினால்தான் இனி விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.