tamilnadu

img

ஒரு மழைக்கே தாங்காத தடுப்பணை: சீரமைப்பு என மீண்டும் நாடகம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்குட்பட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில், நபார்டு வங்கியின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டை வட்டம் திருக்கண்டலம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.32.90 கோடி மதிப்பில் 175 மீட்டர் நீளத்தில் 5.5மீட்டர் அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் 160 மில்லியன் கன அடி மழைநீரை சேமிக்க திட்டமிடப்பட்டது. இதன் மூலம் திருக்கண்டலம், அழிஞ்சிவாக்கம், அத்தங்கிகாவனூர், ஆரிக்கம்பட்டு, சேத்துப் பாக்கம், பாசாயபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் 4-கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீர் மட்டம் உயர இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், 2015ஆம் ஆண்டு டிசம்பரில் திறப்பு விழா காணும் முன்பே அப்போது, பெய்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப்பட் டதால் தான் தடுப்பணை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இதனைத் தொடர்ந்து தடுப்பணையை புதிதாக அமைக்கப்பட வேண்டும், தரமற்ற முறையில் தடுப்பணை கட்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் தற்போது அந்த தடுப்பணையை சீரமைக்க ரூ.18.17 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கியுள்ளது. 2.5-மீட்டர் அளவிற்கு உயரத்தை குறைத்துள்ளதால் வெறும் 45-மில்லியன் கன அடி தண்ணீரை தான் தேக்க முடியும் என கூறப்படுகிறது.

இதற்காக ஆற்றின் இரண்டு கரையையும் பலப்படுத் தும் பணியையும் துவங்கியுள்ளது. இப்பணி 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரியில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.நிலத்தடி நீர் தாராளமாக கிடைத்து வந்த பூமியில் தற்போது நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்று விட்டதால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பணை கட்டியது ஆறுதலாக இருந்த நிலையில் தடுப்பணை உடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதனால் அரசின் பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.அருகில் உள்ள தாமரைப்பாக்கம் தடுப்பணை நூறு ஆண்டுகளை கடந்து கம்பீரமாய் நிற்கும் போது ஒரு மழைக்கு கூட தாங்க முடியாத அளவிற்கு தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடந்ததாலேயே அணை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஏராளமான அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி கூறுகையில், ‘சீரமைப்பு என்ற பெயரில் தடுப்பணையின் உயரம் பாதியாக குறைத்துள்ளனர். இதனால் அணையில் குறைந்த அளவு நீரையே சேமிக்க முடியும். குறிப்பாக உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்திலேயே மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் அதன் உறுதித்தன்மை சந்தேகத்தை எழுப்பியுள்ளதால் தரமற்ற அணையை கட்டிய அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தடுப்பணைஅருகாமையில் புதிதாக தடுப்பணை கட்டினால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை ஆற்றில் கறைவதை தடுக்க, அரசு நேர்மையான அதிகாரிகளை கொண்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.பெ.ரூபன்