தஞ்சாவூர்:
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ/2,300 கோடியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் திட்டமிடப்பட்டுள்ள கல்லணைக் கால்வாய் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவிரிப் பாசனத்தில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் கல்லணை கால்வாய் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்டது. அதன் கொள்ளளவு 4200 கனஅடியாகும். போதிய பராமரிப்பு அவ்வப்போது செய்யப்படாததால் 2,000 கன அடிநீரை கொண்டு வந்தால் கூட கரைகள் உடைப்பு ஏற்பட்டு கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது.
கல்லணைக் கால்வாயை சீரமைக்க நிதிஒதுக்க வேண்டுமென, பல்வேறு விவசாயஅமைப்புகள் வலியுறுத்தியதன் விளைவாக தமிழக அரசு மத்திய அரசிடம் சீரமைப்புக்கு நிதி கேட்டிருந்தது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.2,300 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் கடந்தஜன.22ல் நடைபெற்றது. கூட்டத்தில் பிப்ரவரியில் கல்லணைக் கால்வாய் திட்டத்தினை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தபடி, கல்லணை தலைப்பு முதல், மகாராஜா சமுத்திரம் வடிகால் வரை, 2 நாட்கள் தமிழ்நாடு நீர் மேலாண்மை, ஆற்று பாதுகாப்பு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்யகோபால் தலைமையில் ஆய்வு செய்த குழுவினர் அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளனர்.கல்லணைக் கால்வாயின் நீளம் 148.65 கிமீதூரமாகும். சுமார் 2 லட்சத்து 21 ஆயிரம்ஏக்கர் விவசாய பரப்பாகும். 694 பாசனகுளங்கள் உள்ளன. பராமரிப்பு பணிகள்இல்லாத காரணத்தால் 4,200 கனஅடிதண்ணீர் செல்ல வேண்டிய இவ்வாய்க்காலில் 2,000 கனஅடி நீர் எடுத்தாலே கரைகள்உடையும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாசனவயல்களுக்கு நீர் இன்றி சிரமப்பட்டனர்.
2013 ஆம் ஆண்டில் 400 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் முறையாக நடைபெறவில்லை. தற்போது காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் எனதமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடைமடைப் பகுதி பாசனதாரர்கள் சங்க தலைவரும், சீரமைப்பு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கடிதப் போராட்டங்கள் நடத்தியவருமான குருவிக்கரம்பை ஆ.பழனிவேல் கூறியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் ஆசியவளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.2,300 கோடியில் கல்லணைக் கால்வாய் சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்ட இந்நிலையில் உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட வேண்டும். இதற்கு ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்ற, விவசாய பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை கணக்கெடுத்து தூர்வார வேண்டும் என அரசுக்கும், பொதுப்பணித் துறைக்கும் உடனடியாக மனுக்கள் அனுப்ப வேண்டும். இந்த திட்டம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவேண்டிவரும்” என்றார்.