திருச்சிராப்பள்ளி:
8 மணிநேர வேலை, தண்டனை வழங்கும் முன் முறையான விசாரணை, ஊதிய விகித மாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெற வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 1946ல் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் இந்தியாவின் ஹாரிசன் தலைமையிலான மலபார் போலீசார் சுட்டதில் தோழர்கள் தங்கவேலு, தியாகராஜன், ராஜூ, ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத்திடலில் உயிர் நீத்தனர்.
இவர்கள் நினைவாக 75வது ஆண்டு பொன்மலை தியாகிகள் நினைவு தினம் டிஆர்இயு, சிஐடியு மத்திய சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறுஅன்று திருச்சி பொன்மலை சங்கத்திடலில் அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், டிஆர்இயு செயல்தலைவர் ஜானகிராமன், ஒப்பன்லைன், ஒர்க்சாப் டிவிசன் அனைத்து நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், சிஐடியு பொதுச்செயலாளர் சுகுமாறன், சிஐடியு,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தோழமை சங்கத்தினர் பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.
பின்னர் பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்ற தியாகிகள் நினைவு நாள் கூட்டத்திற்கு டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். டிஆர்இயு நிர்வாகிகள் இளங்கோவன், மாதவன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒர்க்சாப் கோட்ட தலைவர் மகேந்திரன் வரவேற்றார்.கூட்டத்தில் டிஆர்இயு மத்திய சங்க பொறுப்பாளர் பேபிஷகிலா, சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் பேசினர்.
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றி பேசுகையில்: மக்களுக்காக யாரெல்லாம்வாழ்கிறார்களோ அவர்களுக்கு மரணம்என்பது இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்திய தியாகிகளின் நினைவஞ்சலி.தமிழகத்தில் உள்ள ரயில்வே தொழிற்சங்கத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. பிரிட்டிஷ்ரயில்வே நிர்வாகத்தின் தலைநகரமாக இருந்ததுநாகப்பட்டினம். நாகப்பட்டினத்தில் மிகப்பெரிய போராட்டத்தை ரயில்வே தொழிலாளர்கள் நடத்தினர். இதனால் தலைமையகத்தை திருச்சிக்கு மாற்றினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம் கீழதஞ்சையில் உள்ள நிலப்பிரபுத்துவ கோட்டைகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு விதையாக இருந்தது. அதில் முளைத்த இயக்கம் தான் இன்று செங்கொடி இயக்கமாக கம்பீரமாக கீழத்தஞ்சையில் கொடிகட்டி பறக்கிறது.சமீபத்தில் 19க்கும் மேற்பட்ட அகில இந்தியஅரசியல் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து மோடி அரசின் மோசமான கொள்கைகளை எதிர்த்து குமரி முதல் இமயம் வரை 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். தியாகிகளுக்கு அஞ்சலி, வீரவணக்கம் செலுத்துகின்ற இந்த நேரத்தில் இந்த மக்கள் இயக்கத்தை வெற்றிகரமான இயக்கமாக நடத்துவதற்கு சபதம் ஏற்போம்”. இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் டிஆர்இயு திருச்சி கோட்ட செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
ரத்ததான முகாம்
முன்னதாக பொன்மலை தியாகிகள் தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் டிஆர்இயு சார்பில் பொன்மலை சங்கத்திடலில் ரத்ததான முகாம் நடைபெற்றது.ரத்ததான முகாமிற்கு டிஆர்இயு செயலர் தலைவர் ஜானகிராமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ரத்ததான முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், டிஆர்இயு ஒர்க்சாப் கோட்ட தலைவர் மகேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெய்குமார் நன்றி கூறினார். முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இருசக்கர பேரணி
பொன்மலை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து இருசக்கர பேரணி தொடங்கி மேலப்புதூர், குட்ஷெட்,டோல்கேட் வழியாக பொன்மலை சங்கத்திடலைவந்தடைந்தது. சங்கத்திடலில் உள்ள தியாகி ஸ்தூபிக்கு சிஐடியு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் ஜெயபால், டி.கே.ராஜேந்திரன், மணிகண்டன், சீனிவாசன், சந்திரன், கருணாநிதி, மெடிக்கல் ராமச்சந்திரன், வீருமுத்து, தரைக்கடை சங்க கணேசன் உள்பட பலர் மலர் வளையம் வைத்துசெவ்வணக்கம் செலுத்தினர்.
****************
“பெண்களை எல்லா இயக்கங்களிலும் பங்குபெறச் செய்வோம்”
ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்கள் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையை ஏற்படுத்தியது. ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம் அரசியலுடன், சுதந்திர போராட்டத்துடன் இணைந்தது. ரயில்வே போராட்டங்களை கூறும் போது பங்காரம்மாவை நினைவு கூறுவது அவசியம். இவருடைய கணவனும். மகனும் ரயில்வே தொழிலாளி. பங்காரம்மா சவுத் இந்தியன் ரயில்வே யூனியனில் சேர்ந்து ஊதிய மாற்ற உரிமைக்காக போராடியவர். வேலை நிறுத்த போராட்டத்தின் போது பங்காரம்மா கணவர் வேலைக்கு சென்றார். பங்கரம்மா தனது தாலியை கழற்றி கணவனின் முகத்தில் வீசிய வீரமங்கை. போராட்டத்தின் போது அவரின் ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி 22 வயது சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இருந்த போதிலும் அவர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.
ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம் தான் முதல் சம்பளக் கமிஷன் உருவாக காரணம். 8வது சம்பளக் கமிஷின் இருக்குமா என்பது தெரியாது? டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறிவரும் சூழ்நிலையில் தற்போது நமக்கு பொன்மலை தியாகிகளின் உணர்வுகள் தேவைப்படுகிறது. ஆகவே இந்த நிலத்தை பாதுகாப்பது, இந்த சங்கத்தை பாதுகாப்பது, நம்முடைய வரலாற்றை பாதுகாப்பது, பெண்களை எல்லா இயக்கங்களிலும் பங்குபெற செய்வது தான் இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலி ஆகும்.