குடவாசல், ஆக.17- திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் குடவாசல் வட்டார வள மையம் சார்பாக 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் குடவாசலில் நடைபெற்றது. முகாமில் மனநல மருத்துவர், கண் மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் நா.கலைவாணன் முகாமை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் க.இளங்கோவன், கு.கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 181 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். மாவட்ட மறுவாழ்வு அலுவலகம் மூலம் 10 குழந்தைகளுக்கு யுடிஐடி கார்டு, வழங்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 5 பேருக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை, ஒருவருக்கு காதொலி கருவி, 10 பேருக்கு உதவி உபகரணம், 3 நபர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், பாஸ்கர், ஆனந்த், ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். இயன்முறை மருத்துவர்கள் ராஜா, ராம் பிரபாகர் மற்றும் திருவாரூர், வலங்கைமான், நன்னிலம் சிறப்பாசிரியர்கள், குடவாசல் வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். குடவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.இரகுபதி மற்றும் வட்டார ஐ.இ.ஒருங்கிணைப்பாளர் இராஜபாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.