tamilnadu

புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை  நடிகர் சூர்யா வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜூலை 17- சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் சிவக்குமார் கல்வி அறக்கட்டமைப்பின் 40 ஆம் ஆண்டு விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதாவது: மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக்கொள்கை குறித்த புரிதல் மக்களிடம் இல்லை. இது 30 கோடி மாண வர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது. புதிய கல்விக் கொள்கையில் நுழைவு தேர்வுப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தரமான, சமமான கல்வியை வழங்காமல் தரமான மாண வர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? நுழைவு தேர்வில் எப்படி மாணவர்கள் கவனம் செலுத்த முடியும்? கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தேதி நிர்ண யிக்கின்றனர். ஏன் உடனடியாக இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும்? இதை அமல்படுத்துவதில் என்ன அவசரம்?  ஏழை மாணவர்கள் படிப்பதற்காக கிராமப்புறங்களில் அங்கன்வாடி, சத்துணவு பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரு ஆசிரியர் அல்லது 10-க்கும் குறைவான மாண வர்களை கொண்ட பள்ளிகளை மூடலாம் என்று புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. பழங்குடியினர். கிராமப்புற மாணவர்களின் ஆரம்பக்கல்வியை இந்த பரிந்துரை பாதிக்கும். அதே போல் 3 வயது முதல் மும்மொழி திணிக்கப்படு கிறது. மேலும் 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என கல்விக்கொள்கையில் கூறப்படுகிறது. பல வெளிநாடுகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது. தேர்வில் தோல்வி என்றால் குழந்தைகள் வெட்கப்பட்டு குறுகி பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர். ஆரம்பப்பள்ளியில் 95.5 சதவீதம் மாண வர்கள் சேர்ந்தால் அவர்களில் 55 சதவீத மாணவர்கள் மட்டுமே மேல்நிலைப்பள்ளிக்கு வருகின்றனர். 40 சதவீதம் பேர் பள்ளி படிப்பை விட்டுவிடுகின்றனர்.  10 ஆண்டுகளாக ஆசிரியர் இல்லாமல் 30 சதவீத மாண வர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? ஆரம்பப்பள்ளியில் பொதுத்தேர்வு, மேல் நிலைப்பள்ளியில் செமஸ்ட்டர் வைத்துவிட்டு பட்டப் படிப்புக்கு நுழைவு தேர்வு வரும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 60 சதவீதம் என தெரியவந்துள்ளது. கோச்சிங் சென்டருக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. இனி எல்லா இடங்களி லும் கோச்சிங் சென்டர்கள் தொடங்கப்படும்.  நகர்புற மாணவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில நல்ல அம்சங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில் பயப்பட வும், அச்சப்படவும் செய்யும் அம்சங்களும் உண்டு. எனவே அரசுடன் இணைந்து புதிய கல்வி கொள்கையில் மாற்றங் களை கொண்டு வருவோம். இவ்வாறு சூர்யா பேசினார்.