திருத்துறைப்பூண்டி, ஆக.9- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொருக்கை ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கால்நடை பண்ணையில் பல்வேறு வகையான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை பதிவு செய்த பயனாளிக்கு வழங்காமல் அதிகாரிகள் தன்னுடைய சுய லாபத்திற்காக வெளியாட்களுக்கு மாடுகள் விற்றதை கண்டித்து கொருக்கை கால்நடை பண்ணையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், சிபிஐ ஒன்றியச் செயலாளர் கே.பாலு தலைமை வகித்தனர். 30 மாடுகளுக்கு அனுமதி பெற்று 67 மாடுகளை யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்துள்ளார்கள். இதில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல விற்பனை செய்த மாடுகளை மீண்டும் கொருக்கை கால்நடைப் பண்ணைக்கு திரும்பக் கொண்டுவர வேண்டுமென பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.