tamilnadu

img

ஏழைகளின் பட்டாக்கள் பல லட்சத்திற்கு விற்பனை.... திண்டுக்கல்லில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பட்டாக்களை தனி நபர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சவேரியார்பாளையம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதி மக்கள் பட்டா மற்றும் இலவச வீட்டு மனை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமையில் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பாக புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீடில்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை வேண்டும், ஏற்கனவே பட்டா கேட்டுமனுக்கொடுத்தவர்களின் மனு மீதான விசாரணையை விரைந்து முடித்து பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்கியவர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அளந்து தரவேண்டும். ஜீவாநகர், நேருஜிநகர், சகாயமாதா புரம், அசனாத்புரம் ஆகிய பகுதியில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், புரோக்கர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோல் பதனிடும்தொழிலாளர் சங்கம் (சிஐடியு) செயலாளர்  சி.பி.ஜெயசீலன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன், நகரச்செயலாளர் பி.ஆசாத், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜானகி, கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்  ஜீவாநந்தினி, நகர்க்குழு உறுப்பினர்கள் அரபுமுகமது, தவக்குமார், கே.எஸ்.கணேசன், ஜோதிபாசு,
கிளை செயலாளர்கள் ஸ்டாலின், ஏஞ்சல், கிட்டேரியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

லட்சக்கணக்கில் மோசடி
இப்போராட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி கூறும்போது, திண்டுக்கல்லில் பல ஆண்டுகளாக சொந்த வீடு, நிலம் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு நிலங்களை ஆர்ஜிதம் செய்து பட்டா கொடுக்க வேண்டும் என்று சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஏற்கனவே செட்டிநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, அடியனூத்து ஊராட்சிகளிலும் 2000க்கும்மேற்பட்ட பட்டாக்கள் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அந்த நிலங்களை அடையாளம் காட்டி அளந்து தந்து குடியமர்த்த வழி செய்ய வேண்டும்.. இந்த கொரோனா காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள் அந்த பட்டாக்களை ரத்து செய்து லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொண்டு புரோக்கர்களுக்கும், தனி நபர்களுக்கும் விற்று உள்ளார்கள். ஏழை மக்களுக்குகொடுக்கப்பட்ட பட்டாக்களை உடனடியாக அவர்களுக்கே வழங்க வேண்டும் என்று கூறினார்.

புரோக்கர்களிடம் பட்டா வழங்கும் வருவாய் அதிகாரிகள்
சிஐடியு தோல்பதனிடும் தொழிலாளர் சங்க கௌரவத் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போலஒரு போராட்டத்தை நடத்தியுள்ளோம். 150 பேருக்கு அன்றைக்கு மொட்டனம்பட்டி பகுதியில்உள்ள நிலங்களில் குடியிருக்க பட்டா கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இதே சவேரியார்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொடுத்த இடத்தையே பெயர் மாறுதல் செய்து பட்டா கொடுத்து உள்ளுர் மக்களுக்கு இடையே மோதலை உருவாக்குவது போல அதிகாரிகள் நடவடிக்கை இருந்தது. 

முதல்வர் வழங்கிய பட்டாவிலும் பிரச்சனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வந்த போது 250 பேர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாவும் தற்போது பிரச்சனைக்குரிய பட்டாக்களாக மாறி உள்ளது. மேலும் சாதாரண ஏழை எளிய மக்களிடம்  பணத்தை பெற்றுக்கொண்டு வருவாய்துறை அதிகாரிகள் ரூ.2 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏழை மக்களின் பட்டாக்களை  புரோக்கர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த புரோக்கர்கள் பட்டாக்களை ரூ.50 ஆயிரம்வரை விற்று விடுகிறார்கள். பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா தந்தாலும் அந்த இடம் எங்கு இருக்கிறது என்பது பட்டா பெற்றவர்களுக்கு தெரியாத நிலை உள்ளது. எனவே பட்டாவுக்குரிய இடத்தை கையகப்படுத்தி தர வேண்டும். 

பட்டா நிலம் ஆக்கிரமிப்பு
தாடிக்கொம்பு அகரம் பகுதியில் 150 பட்டாகொடுத்தார்கள். அந்த நிலத்தில் கல் ஊன்றப்பட்டு மனை பிரிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள சில ஆக்கிரமிப்பாளர்கள் அந்த கற்களையெல் லாம் பிடுங்கியெறிந்து விவசாயம்  செய்து வருகிறார்கள். சவேரியார்பாளையம் பகுதி மக்களுக்கு 15 கிலோ மீட்டருக்கு அப்பால் வீட்டு மனை வழங்கினால் எப்படி சென்று குடியிருப்பார்கள். இதே போல மொட்டனம்பட்டியிலும், ஜம்புளியம்பட்டியிலும் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று மக்கள் எப்படிகுடியிருப்பார்கள். இந்த மக்களின் குழந்தைகள் இங்குள்ள பள்ளியில் படிக்கிறார்கள். இந்த தோல்சாப்புகளில் பணிசெய்கிறார்கள். அதனால்ஜம்புளியம்பட்டி பகுதியில் கொடுக்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.  எனவே அருகில் உள்ளநிலங்களில் பட்டா வழங்க வேண்டும். மேலும் அரசு பட்டா கொடுப்பதோடு, பசுமை வீடு ஒதுக்கிவீடும் கட்டித்தந்தால் தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.  

30 ஆண்டுகளாக பட்டா இன்றி தவிக்கிறோம் 
திண்டுக்கல்லில் 30 ஆண்டுகளாக பட்டா இன்றி தவிக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னே அணிவகுத்து உள்ளோம். பட்டாவுடன் கூடிய இலவச வீட்டு மனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். அது பற்றிய விவரம் வருமாறு:

இட்டேரியம்மாள்
கிழக்கு சவேரியார்பாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கும் எங்களது வீட்டுக்கு பட்டா இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தொடர்ந்து பட்டா கேட்டு போராடுகிறோம். புரோக்கர்களிடம் தான் அரசு பட்டா கொடுக்கிறது. நேரடியாக மனு செய்தால் தருவதில்லை. அதனால் தான் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளோம். எங்களுக்கு உரிய பட்டாவை சிபிஎம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம். 

                        ***************

லில்லிபுஷ்பம்
கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஊரில் குடியிருந்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்டு வருபவர்கள் பட்டா தருவதாக வாக்குறுதி தருகிறார்களே ஒழிய யாரும் எங்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை நான் இரண்டு முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். ஆனால் அரசு பட்டா வழங்கவில்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பின்னே அணிவகுத்து உள்ளோம். நிச்சயம் எங்களுக்கு பட்டாவுடன் கூடிய வீட்டு மனை  கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

                        ***************

ஆரோக்கியசெல்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் நாங்களும் பங்கேற்று உள்ளோம்.  திருமணமாகி கடந்த 18 ஆண்டுகளாக வாடகை வீடுகளில்  தான் மாறி மாறி குடியிருந்து வருகிறோம். போதிய இடவசதியின்றி குடிசை வீட்டில் தான் வசிக்கிறோம். அரசு எங்களுக்கு இலவச வீட்டு மனை கொடுத்தால் நிரந்தரமாக ஒரு சொந்த வீட்டில் குடியிருப்போம்.    (ந.நி.)