தஞ்சாவூர் ஆக.31- திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் பெயரில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்ஆட்சியர் ஆ.அண்ணாதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளை ஏமாற்றி மோசடியாக, விவசாயிகளின் பெயரில் வங்கி அதிகாரிகளின் துணையுடன் கார்ப்பரேஷன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது. மோசடியில் ஈடுபட்ட திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரை சந்தித்து ஏற்கனவே புகார் மனு அளித்தோம். பாபநாசம், கபிஸ்தலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விவசாயிகள் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. சர்க்கரை ஆலை நிர்வாகம் திவால் அறிவிப்பு செய்து விட்டது. இந்நிலையில் கார்ப்பரேஷன் வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள் 112 பேரில் 50 விவசாயிகளுக்கு, 2019 செப்டம்பர் 17 அன்று கடன் தீர்ப்பாயத்தில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் பெயரில் மோசடியாக ஆலை உரிமையாளருக்கு கடன் வழங்கிய வங்கி உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதோடு, வாழ்வின் விளிம்பில் நிற்கும் விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்க செய்திட வேண்டும். விவசாயிகளை ஏமாற்றிய ஆலை நிர்வாகம் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் மீது உரிய வழக்கை பதிவு செய்ய வேண்டும்" என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.