திருவண்ணாமலை,ஏப்.18- திருவண்ணாமலை தொகுதியில் 1717 வாக்குச்சாவடிகளில் வியாழனன்று மக்கள் வாக்களித்தனர். ஆரணியில் 1756 வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்தனர். திருவண்ணாமலையில் வாக்குப் பதிவு துவங்கிய காலை 7 மணிக்கு பல்வேறு வாக்கு சாவடிகளில் வாக்குபதிவு இயந்திரத்திற்கு ஸ்டிக்கர் டேப் சுற்றி, சீல்வைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் பரவலாக அரை மணிநேரம் தாமதமாக வாக்குபதிவு துவங்கியது. செங்கம் சகாயமாதா பள்ளி வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டு அது சரிசெய்யப்பட்டது. இதனால், 1 மணி நேரம் தாமதமாக வாக்குபதிவு நடைபெற்றது. இதேபோல், புதுப்பாளையம் அறிஞர் அண்ணா பள்ளி வாக்குச்சவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அங்கு காலை 11,30 மணிக்கே வாக்குபதிவு துவங்கியது. காலை 9 மணி நிலவரப்படி திருவண்ணாமலை தொகுதியில் 8.12 சதவீதமும், ஆரணி தொகுதியில் 8.75 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
திருவண்ணாமலையில் சித்திரை பவுர்ணமி நடைபெறுவதால், அதற்காக தென்னக ரயில்வே வேலூரிலிருந்து, திருவண்ணாம லைக்கு சிறப்பு இரயிலை இயக்கியது. ஆனாலும் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கு பேருந்து வசதியில்லாததால், வேலூர், விழுப்புரம் மார்க்கமாக சுற்றி வந்ததாக வாக்காளர்கள் பலர் தெரிவித்தனர். வந்தவாசி வட்டம், மருதாடு கிராமம், இருளர் குடியிருப்பில் வசித்து வரும் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டு தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக வாக்காளிக்க இருந்த கண்ணியப்பன் (85) மற்றும் அவரது குடும்பத்தினர் கருப்பாயி (55), பாபு, பிரபு, காமாட்சி, ராதிகா, ராஜேந்திரன் ஆகிய 7 நபர்களையும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மருதாடு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு அழைத்து சென்று வாக்களிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்தார்.மாலை 4 மணிக்கு ஆரணி தொகுதிக்குட்பட்ட ஆரணி நகரம், கொசப் பாளையம், முள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் தேமுதிகவினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் 3 பேர் படுகாயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.