tamilnadu

img

போர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்

பென்னாகரம், மே 6-ஒகேனக்கல் அருகே போர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து பணியை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சேலம் மாவட்டம், ஆத்தூர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான போர்வெல் லாரி திங்களன்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே பிலிகுண்டு என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் லாரிக்கடியில் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து அஞ்செட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதால் அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதில் பலர் வடமாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.