திருவண்ணாமலை,மே 27-திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலசபாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் பூதூர் பகுதியில் 7 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிணற்றில் தண்ணீர் வறண்டுவிட்டது.கிணற்றை ஆழப்படுத்தியோ, ஆழ்துளை கிணறு அமைத்தோ மக்களுக்கு, குடிநீர் வழங்க வேண்டும் என வலிறுத்தி, பெண்கள், பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அருகில் உள்ள மிருகண்டா அணையை மேம்படுத்தி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.