திருவண்ணாமலை, ஆக. 3- திருவண்ணாமலையில் அனுமதியின்றி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை தொழிற்சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், காவல்துறையினர், மாவட்ட போக்குவரத்துத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை - சென்னை 122 வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெஜஸ்டிக் என்ற பெயரில் புதிய தனியார் ஆம்னி பேருந்து அலுவலகம் செயல்படுகிறது. சனிக்கிழமை முதல் (ஆக. 3) திருவண்ணாமலை – சென்னை இடையே தினசரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக விளம்பரங்கள் வெளியானது. ஆன்லைனில் இருக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் சனிக்கிழமையன்று சிஐடியு நிர்வாகிகள் கே.நாகராஜன், பாரி, எம்.வீரபத்திரன், ஏ.கேசகர், கருணாமூர்த்தி, எம்.ரவி, தொமுச தலைவர் சௌந்தரராஜன், நிர்வாகிகள் துரைசாமி, மலைவாசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் அங்கு திரண்டு, தனியார் பேருந்து இயக்கத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்), கிளை மேலாளர்கள் தனியார் பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதி பெறாமல் தனியார் பேருந்து இயக்கப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருவண்ணாமலை – சென்னை இடையே தனியர் ஆம்னி பேருந்து இயக்க, இதுவரை முறையான அனுமதி வழங்கப்படவில்லை. பொதுவாக சாலை வழித்தடங்களில், அரசு பேருந்துகள் மட்டுமே, சாதாரண கட்டணத்தில் ஸ்டஜ் கேரேஜ் ஆக இயக்கப்படுகிறது. மற்ற போக்குவரத்து வாகனங்கள், ஒப்பந்த கட்டண அடிப்படையில் கான்ட்ராக்ட் காரேஜ் ஆக இயக்கப்படுகிறது. தற்போது தனியார் ஆம்னி பேருந்துகள், சுற்றுலா செல்லும் வகையில் டிரிப்ஷீட் போடப்பட்டு தினசரி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 பேர் செல்லக்கூடிய பேருந்தில், 100 பேர், 150 பேர் வரை டிக்கெட் புக் செய்தால், அதற்கேற்றவாறு கூடுதலாக அதே பெயரில், அதே நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் அரசுக்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும் தினசரி பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கோட்டங்களில் அதிக வருவாய் வருவது, விழுப்புரம் கோட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மண்டலம்தான். இங்கிருந்து தினசரி அதிகாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 வரை, 10 நிமிடத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இரவில் 30 நிமிடங்களில் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் வசூல் பல மடங்கு அதிகரிக்கும். தற்போது தனியார் ஆம்னி பேருந்து இயக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருவண்ணாமலையி லிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரதிமீனா தனியார் ஆம்னி பேருந்தை தடுத்தி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட இருந்த நட்டத்தை தடுத்து நிறுத்தினோம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.