திருவள்ளூர், மே 21- இனச் சான்றிதழ், குடிநீர், சாலை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 8ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தெரிவித்துள்ளார்.பழங்குடியின மக்களுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு, மின் இணைப்பு, குடிமனைப் பட்டா போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் (எஸ். டி)பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாயன்று (மே 21) நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். இதில் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், பொருளாளர் எஸ். குமரவேல், மாநில துணைச் நிர்வாகிகள் பிரகாஷ், இ.கங்காதுரை, ஆதிவாசிகள் உரிமைக்கான தேசிய அமைப்பின்மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் பி.கருணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பி.டில்லிபாபு பேசியதாவது:-கடந்த 50-ஆண்டுகளுக்கு மேலாகபழங்குடி மக்களை அரசு புறக்கணித்துவருகிறது. இன்னும் பழங்குடியினருக்கு குடி தண்ணீர், இனச் சான்றிதழ், வீட்டுமனை, அரசு ஒதுக்கும் நிதியையும் இவர்களின் முன்னேற்றத்திற்கு செலவு செய்யாமல் இருக்கும் நிலைதான் உள்ளது.கேரளாவில் பழங்குடி இன மக்களுக்கு ரூ.6.20லட்சம் மதிப்பில் 420 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டிகொடுத்துள்ளனர். பண்டிகை காலத்தில் ரூ.2ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு, வெல்லம் என அனைவருக்கும் வழங்குகிறது. ஆனால் தமிழக அரசோ பழங்குடி மக்களை மனிதனாகவே மதிக்கவில்லை. இந்நிலையில் குடிநீர், தொகுப்பு வீடு, தெரு விளக்கு, குடிமனைப் பட்டா கேட்டும், வேட்டைக்காரன் இனமக்களை பழங்குடியினர் (எஸ். டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூலை 8 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.