திருப்பூர்:
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குஅளிக்க தமிழக அரசு நிறைவேற்றும் சட்டத்துக்கு, தமிழக மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வற்புறுத்தி உள்ளார்.
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தடுப்பூசி முகாம் சாதனைக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் ஞாயிறன்று ஒரு நாள் மட்டும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தி சாதனை படைத்திருக்கிறார்கள். தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாராட்டுகள். இதே வேகத்தோடு தமிழ்நாட்டில் எல்லோரு க்கும் தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய வேண்டும். அதன் மூலம்மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியும். ஒன்றிய அரசும் தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகளை தடை
யில்லாமல், தாமதம் இல்லாமல் வழங்கவேண்டும். ஏனென்றால் ஞாயிறு கூட பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்திருந்தாலும் போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு வேகமாக செயல்படும் போது அதற்கு ஏற்ப ஒன்றிய அரசு விரைந்து தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
நீட் விதிவிலக்கு சட்டம்
மேட்டூரில் தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மீண்டும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏற்கெனவே அனிதா உள்பட பல மாணவ, மாணவிகள் நீட் தேர்வின் காரணமாக உயிரைப் பறி கொடுத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக் கிறது. இன்று (திங்கள்) தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நீட் தேர்வை எதிர்த்து விதி விலக்கு கோருகிற மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு தொடர்ந்து அடம் பிடித்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்கிறது. தற்கொலைகளில் மாணவர்கள் ஈடுபடுவது கூடாது. அது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் உணர்வு களைப் புரிந்து கொண்டு தமிழக அரசு நிறைவேற்றும் சட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நேரத்தில் எச்.ராஜா, ஏதோ ஒன்றிய அரசின் மந்திரியாக இருப்பது போல் நீட் தேர்வு பற்றி ஒன்றும் செய்ய முடியாது, உச்சநீதி மன்றத் தீர்ப்பு இருக்கிறது என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் சேர்ந்துதான் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று தீர்ப்பு கொடுத்தார்கள். ஆனால் அதை எதிர்த்து தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு வாங்கி, ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்து ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கவில்லையா? இட ஒதுக்கீட்டுக்குப் பொருந்துவது, இதற்கு ஏன் பொருந்தாது? ஆகவேஒரு அரைவேக்காட்டுத் தனமாக எச்.ராஜா போன்றவர்கள் தமிழ்நாட்டு உணர்வுகளை, தமிழ்நாட்டு சட்ட மன்றத்தையே கொச்சைப்படுத்தும் முறையில் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல.
ஃபோர்டு கம்பெனியை மூட அனுமதிக்கக் கூடாது
சென்னையில் ஃபோர்டு கார் கம்பெனியில் கிட்டத்தட்ட 40 ஆயிரம்பேரின் வேலையைப் பறிக்கக்கூடியமுறையில் இரண்டு தொழிற்சாலை களை மூடப் போவதாக அறிவித்திருக் கின்றனர். ஒரு கம்பெனி நிர்வாகம் மட்டும் மூடுவதற்கு முடிவெடுக்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதி வாங்க வேண்டும். 40 ஆயிரம் பேரின் எதிர்காலம்கேள்வி ஆகி இருக்கிறது. ஏற்கெனவே நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு 12 ஆயிரம் தொழிலாளிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு மூலதனத்தை வரவழைப்பதும், அவர்கள் ஆயுள் காலம் முழுவதும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பதும், கணிசமாக லாபம் சம்பாதித்து முடித்தவுடன் நஷ்டக் கணக்கு காட்டி தொழிற்சாலையை மூடிவிட்டு தொழிலாளர்களை நிர்கதியாக விட்டுவிட்டுப் போவதை ஏற்க முடியாது. எனவே ஒன்றிய அரசு இதில் தலையிட வேண்டும். மாநில அரசு வலியுறுத்த வேண்டும். அந்த தொழிற்சாலையை மூட அனுமதிக்கக்கூடாது. லாபம், நஷ்டம் மாறி மாறி வரும். இவ்வளவு காலம் லாபம் வரும்போது யாரிடம் கொண்டு போய் கொடுத்தீர்கள்? தனியார் விருப்பத்துக்கு ஏற்ப தொழிற்சாலையை மூடி தொழிலாளர் வாழ்வை நாசமாக்கக் கூடாது.
போராட்டத்தை ஆதரிப்பீர்!
அகில இந்திய அளவில் போராடக் கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி, இடதுசாரி கட்சிகள் சேர்ந்து வரும் 27ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் அறிவித்திருக் கிறோம். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அந்த பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழக சட்டமன்றத் திலேயே 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறார். எனினும் ஒன்றிய அரசு மசியவில்லை. எனவே ஒன்றிய அரசைக் கட்டாயப்படுத்த, வற்புறுத்த, அடுத்த கட்டமாக நாடு தழுவிய பந்த் என அறைகூவல் விட்டிருப்பதால் அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் இதை ஆதரிக்க வேண்டும்.மோடி அரசை எதிர்த்து 19 கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகிற 20ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கண்டனஇயக்கம் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 20ஆம் தேதி திமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து நடத்தும் இப்போராட்டத்தில் கோடிக்கணக்கான வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
கல்குவாரி கொள்ளை
திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 100க்கும்மேற்பட்ட கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், சட்டவிரோத மாக செயல்பட்ட கல் குவாரிகள்மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், பின்புலமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நாட்டில் இயற்கை வளங்களை சட்டவிரோதமாக கொள்ளையடித்து பல லட்சக்கணக் கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துகிறார்கள். நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் தாது மணல், கிரானைட், மணல் போன்ற இந்த குவாரிகள், இயற்கைவளங்களை அரசே நேரடியாக கையகப்படுத்தி அதில் ஊழல் முறைகேடுகள் இல்லாமல் நடத்தினால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வரும். ஆனால் அதை தனியார் கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. குவாரிகளை சீல்வைத்தால் மட்டும் போதாது, அரசுக்குஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்ட அதி காரிகள், குவாரி உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் யாராகஇருந்தாலும் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுக!
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் திருப்பூரில் எந்த பக்கம் போனாலும் சாலைகளை பெயர்த்து நாசப்படுத்தி வைத்துள்ளனர். அதை உடனடியாக செப்பனிட்டுத் தர வேண்டும். அதேபோல் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் சாலை மறியல் நடத்தும் நிலை உள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு அரசு உரிய முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த வேண்டும். திருப்பூரில் அதிக தொழிலாளர்கள் இருப்பதால் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும் என நீண்ட காலமாக தொடர்ந்து வற்புறுத்துகிறோம். இதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், பணி உத்தரவு வந்துவிட்டது எனச்சொல்லியும் இதுவரை கட்டப்பட வில்லை. இஎஸ்ஐ மருத்துவமனையை உடனே கட்ட வேண்டும்.அதேசமயம் பின்னலாடைத் தொழிலுக்கு திரும்பத் திரும்ப நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. நூல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் ஆடைகளை உற்பத்தி செய்துசர்வதேச சந்தையில் போட்டியிட முடியவில்லை, ஏற்றுமதிக்கான வரிகள், கட்டணங்கள் உயர்ந்துவிட்டதால் மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியவில்லை என ஏற்றுமதியாளர்கள் பல கோரிக்கைகளை அரசுக்கு வைத்திருக்கிறார்கள். திருப்பூர் என்றால் திருப்பூருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் ஒரு மிகப்பெரிய தொழில் கேந்திரம். பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடியின்அபாண்ட பழி
நீட் மாணவர் தற்கொலைக்கு, திமுகவின் குழப்பமான நிலைதான் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் கூறிய கே.பாலகிருஷ்ணன், “இதற்கு அவர்தான் காரணம் என்பதை அவரே சொல்லிக் கொள்ள முடியாது. நீட் தேர்வை ஏற்கெனவே ஜெயலலிதா காலத்தில் தடுத்து விதிவிலக்கு வாங்கியது போல் இவர் விதி விலக்குபெற்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டார். இவர்தான் நீட் தேர்வு பற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தில்லிக்கு அனுப்பினார். அந்த சட்டத்தை திரும்ப அனுப்பிவிட்டார்கள் என்ற தகவலைக் கூட அவர் சட்டமன்றத்தில் சொல்லவில்லை. சட்டமன்ற தீர்மானம் ஒன்றிய அரசுக்குப் போய் திரும்ப அனுப்பினால், அதை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பலாம். அதைஒன்றிய அரசு மறுக்க முடியாது. ஏன் அதை சட்டமாக நிறைவேற்றிஅனுப்பவில்லை. சட்டத்தை நிராகரிப்பதைப் பற்றி உச்சநீதிமன்றத் துக்கும் போகவில்லை. எனவே தன்மீது இருக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது, பழிபோடுவது அபாண்டமானது, உண்மைக்கு மாறானது. இப்பிரச்ச னையில் மாநில அரசு தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்கிறது. அதற்கு மேல் ஒன்றிய அரசு மசியவில்லை, மனிதாபிமானமே இல்லை, மனசாட்சி இல்லாத ஒன்றிய அரசை நாம்என்ன செய்வது என்றும் கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
******************
மக்களை கொள்ளையடிக்கவே பணமாக்கல்
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து பாடல் பாடி அஞ்சலி செலுத்திவிட்டுப் போயிருக்கிறார். பாரதியார், “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ? நாங்கள் சாகவோ” என்று பாடி இருக்கிறார். அவரது சிலைக்கு மாலை போட்டுவிட்டு, பொதுத்துறை சொத்துகளை ரூ.6.75 லட்சம் கோடிக்கு நீண்ட கால குத்தகைக்கு விடப் போவதாக அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். கடந்த 30 ஆண்டுகளில் ரூ.6 லட்சத்து 72 ஆயிரம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. என்ன பொருளாதார நெருக்கடியைத் தீர்த்திருக்கிறார்கள்? இப்போது பொதுத்துறையை குத்தகைக்கு விடுவதல்ல, ஒட்டுமொத்தமாக பொதுத்துறையை மூடுவதற்கான ஏற்பாடு. அதுமட்டுமல்ல, இதை வாங்கக்கூடிய எந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு பைசா கூட இழப்பு ஏற்படப் போவதில்லை. ரயில் நிலையத்தை நீண்ட கால குத்தகைக்கு விடப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு திருப்பூர் ரயில் நிலையத்தை 30 வருடம் குத்தகைக்கு விட்டால், உள்ளே நுழைய நூறு ரூபாய் கட்டணம், டீ குடிக்க 50 ரூபாய் என விமான நிலையம் போல் விலை நிர்ணயித்தால் யார் என்ன கேட்க முடியும்? எனவே குத்தகை விடுவதன் மூலம் ரூ.6.20 லட்சம் கோடி அரசுக்கு வருமானம் என்பது தனியார் முதலாளிகள் பணம் அல்ல, அது முழுக்க, முழுக்க சாதாரண, ஏழை, நடுத்தர மக்களின் தலையில் சுமத்தப்படும் சுமை. இதன் மூலம் பல லட்சம் கோடி கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் ஈட்டுவதற்கு வழி செய்து கொடுக்கிறார்கள். இதற்குப் பெயர் பணமாக்கல் நடவடிக்கை. ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்று பெயர் வைத்து நாடே திவாலாகிப் போனது. இப்போது பணமாக்கல் நடவடிக்கை மூலம் இன்னொரு பக்கம் கொள்ளையடிக்க அனுமதிக்கப் போகிறார்கள்.