சென்னை,ஏப்.28- கண்ணகி - முருகேசன் ஆணவப்படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு.
தமிழ்நாட்டையே உலுக்கிய விருத்தாசலத்தைச் சேர்ந்த கண்ணகி - முருகேசன் கடந்த 2003ஆம் ஆண்டு சாதி மருப்பு திருமணம் செய்துகொண்டதற்காக ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 13 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சிபிஎம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது;
கண்ணகி - முருகேசன் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் மனவுறுதியுடன் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ள முருகேசனின் குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகர்கள் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.
முருகேசன் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பினை வழங்குவதுடன், சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது