tamilnadu

img

செவ்வணக்கம் தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் செங்கொடி தாழ்த்தி சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அஞ்சலி!

செவ்வணக்கம் தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் செங்கொடி தாழ்த்தி சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அஞ்சலி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அந்த இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மகத்தான தலைவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தமது ஆழ்ந்த இரங்கல் களைத் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தன், கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் முன்னாள் உறுப்பினர். அவருக்கு வயது 101. தோழர்கள் அனைவராலும் வி.எஸ். என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் கேரளத்தில் பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய ஒரு  திறமையான அமைப்பாளர். ஆரம்பத்தில் அவர் ஆஸ்பின்வால் கம்பெனியில் தென்னை நார் கயிறு தொழிலாளர்களை அமைப்பு ரீதி யாகத் திரட்டி, அவர்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கி, தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 17 வயதாக இருக்கும்போதே, 1940ஆம் ஆண்டிலேயே, கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். நிலவுடைமையாளர்களால் ஒட்டச் சுரண்டப்பட்ட குட்டநாடு விவசாயத் தொழி லாளர்கள் மத்தியில் பணி செய்யுமாறு தோழர் கிருஷ்ணபிள்ளை அவருக்கு வேலையை நியமித்த பின் அவர்கள் மத்தியில் அமைப்பைக் கட்டினார். திருவாங்கூர் திவானுக்கு எதிராக நடைபெற்ற புன்னப்புரா - வயலார் கிளர்ச்சிப் போராட்டத்தில் தலைமறைவாக இருந்து செயல்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினரால் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். தோழர் வி.எஸ். 1956-ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழு விற்கும், பின்னர் 1958-ஆம் ஆண்டு அதன் தேசியக் கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  அமைத்திட்ட 32 தேசியக் கவுன்சில் உறுப்பினர் களில் இதுவரை நம்மோடு வாழ்ந்து கொண்டி ருந்தவர் தோழர் வி.எஸ். அவர்கள் தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் செயலாளராகவும் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் பணியாற்றினார். 1964-ஆம் ஆண்டு கட்சியின் மத்தியக் குழு விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985ஆம் ஆண்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  வயது முதிர்வு காரணமாக மத்தியக்குழு வின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப் பட்டிருந்த அவர், 2022ஆம் ஆண்டு மத்தியக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டார். தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் கேரள  சட்டமன்றத்திற்கு ஏழு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர். இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவ ராகவும், 2006 முதல் 2011 வரை முதலமைச்ச ராகவும் பணியாற்றினார். முதலமைச்சராக இருந்த சமயத்தில் உழைக்கும் மக்களின் நல னுக்காக சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாக வும் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண் டார். சுமார் எண்பத்தைந்து ஆண்டு காலம் கட்சியுடன் கொண்டிருந்த தொடர்பின்போது, தோழர் வி.எஸ்., கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தார். ஒரு  மிகச்சிறந்த பேச்சாளராக மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். கடுமையான வாழ்க்கை முறைக்கும், சமூக நீதிக்கான அசைக்க முடியாத அர்ப் பணிப்புக்கும் பெயர் பெற்ற தோழர் வி.எஸ்.,  கேரள அரசியலில் ஓர் அழியாத முத்திரை யைப் பதித்துள்ளார். அவரது இழப்பால் கட்சியும், கம்யூனிஸ்ட் இயக்கமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தன் செங்கொடியை இறக்கி வைக்கிறது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தனின் மனைவி, மகன் மற்றும் மகளுக்கு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் 

சென்னையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் படத்திற்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு - மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.