ஆலப்புழாவில் நாளை அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி
மறைந்த கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி நிகழ்ச்சிகள், ஆலப்புழாவில் புதனன்று (ஜூலை 23) அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளன. தோழர் வி.எஸ். உடல், எஸ்.யு.டி. மருத்துவ மனையில் இருந்து திங்களன்று மாலை ஐந்து மணிக்கு மாநிலக்குழு அலுவலகமான ஏகேஜி சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. பின்னர், இரவில் திருவனந்த புரத்தில் உள்ள வீட்டிற்கு, வி.எஸ். உடல் கொண்டு செல்லப்பட்டது. செவ்வாயன்று காலை ஒன்பது மணிக்கு தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் வி.எஸ். உடல், பிற்பகலில் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஆலப்புழா கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்ப வீட்டில் உடல் வைக்கப்படும். புதனன்று காலை 9 மணிக்கு ஆலப்புழா மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, மாலையில் அங்குள்ள பெரிய சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.