tamilnadu

img

சிபிஎம் கோவிட் ஹெல்ப் லைன்... திருப்பூர்....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவிட் ஹெல்ப் லைன் கடந்த 2021 மே மாதம் 8 தேதி மாலை முதல் செயல்பட துவங்கிய தருணத்தில் இருந்து ஏராளமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  இந்த உதவி மையத்தில்  10 மருத்துவர்கள், பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் உட்பட சுமார் 60 பேர் நேரடியாகவும், அலைப்பேசி வாயிலாகவும் உதவி செய்து வருகிறார்கள்.

தினமும் சராசரியாக 200 முதல் 250 அழைப்புகள் வரை நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பெறப்பட்டு தகவல்கள் சொல்லி வழிகாட்டப்படுகிறது.  கொரோனா நோய் தொற்றால் உலகமே பீதி அடைந்து கிடக்கும் தருணத்தில் அதற்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுதல்களையும்,  வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இத்தருணத்தில் சொல்லிக் கொள்வது பொறுத்தமாக இருக்கும்.

அரசியல் இயக்கம் என்கிற முறையில் கோரிக்கைகளை மட்டும் வைத்துக் கொண்டிருக்காமல் ஆக்கப் பூர்வமான பணிகளில் நேரடியாக ஈடுபடுவது என்ற முறையில் திருப்பூர் நோயாளிகள் படும் அவலத்தில் இருந்து இத்தகைய உதவி மையம் மற்றும் நேரடியான உதவிகள் செய்வது என்ற முடிவுக்கு  வந்தோம். இதே காலத்தில் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மகத்தான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மகாராஷ்டிராவில், ஆந்திரா, தெலுங்கானாவில் கட்சி அலுவலகங்களில் தற்காலிக மருத்துவமனைகளாக வாய்ப்புள்ள இடங்களில் அமைக்கப்பட்டு மக்களுக்கான உதவும் மையங்களாக செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட செந்தொண்டர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மனஅழுத்தம் போக்கும் ஆலோசனை மையங்கள் என பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
கடந்த 2020 மார்ச் ஊரடங்கிற்கு பின் பல்வேறு கட்ட பணிகளை அப்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்கப்பணியோடு மக்களுக்காக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு காலம் முழுவதும் முழுமையாக செயலாற்றினோம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணப் பொருட்களை அப்போது நண்பர்கள், அமைப்புகள் உதவியோடு செய்து கொடுத்தோம். தற்போது இரண்டாவது கொரோனா அலையின் போது ஏற்பட்டுள்ள புதிய சூழலில்  அதற்கு தகுந்தாற்போல் நிவாரணப்பணிகளை மேற்கொள்வது என முடிவு எடுத்தோம்.

குறிப்பாக   தடுப்பூசி மையங்கள் குறித்த விபரம், நோயாளிகளை மருத்துவர்களிடம் கலந்து பேசச் சொல்வது, ஆக்சிஜன் நிலவரம், கிடைக்கும் இடங்கள் குறித்த விபரம், கோவிட் பரிசோதனை அரசு மற்றும் தனியார் மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இதர போக்குவரத்து குறித்தும், நகர் நல அதிகாரிகள்,  சுகாதாரப் பணியாளர்கள் உடன் உடனுக்குடன் தொடர்பு கொள்வது, கோவிட் சிகிச்சை மையங்கள், முதல்வர் மற்றும் தனியார் காப்பீடுகள் குறித்த விபரங்களை தெரிவிப்பது, இரத்ததானம் செய்வது குறித்த விபரங்கள்  மற்றும் இரத்ததானம் வழங்குவது, வெளியே வர முடியாமல் உள்ள நோயாளிகளுக்கு மருந்துபொருட்கள் வாங்கி கொடுப்பது. சிகிச்சை மையங்களில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து விபரங்களை அரசுக்கு தெரிவிப்பது,  நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள் குறித்து சொல்வது, தனிமைப்படுத்தும் போது செய்ய வேண்டியது / செய்யக் கூடாதது குறித்த விபரங்கள், மன அழுத்த ஆலோசனைகள், பயன்படுத்தப்படும் அடிப்படை மருந்துகள் குறித்த புரிதலை உருவாக்குவது, ஏற்கனவே இணை நோய்கள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது குறித்த ஆலோசனைகள், அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள், நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, பாதிக்கப்பட்டவர்களோடு உடனான தொலை தொடர்பு மற்றும் உதவிடுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். 

இதற்காக  பல துறை சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டு கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்து இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )  447 தியாகி பழனிசாமி நிலையம், அவிநாசி சாலை, திருப்பூர் என்ற முகவரியில் இந்த கொரோனா தடுப்பு உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

$    வாலிபர் அமைப்பின் இரத்ததான கழகத்தின் மூலம் சில அமைப்புகள் மற்றும் நண்பர்கள் உதவியோடு 270 லிட்டர் குளிர்சாதனப்பெட்டி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு நன்கொடையாக வழங்கியதோடு இரத்ததானம் செய்யப்பட்டது. 

$  தணிக்கையாளர் அமைப்பின் உதவியோடும், இதர நண்பர்கள் உதவியோடு டிஒய்எப்ஐ இரத்ததான கழகம் மூலம் ஆக்சிஜன் அவசர தேவைக் கருதி  20 சிலிண்டர்கள் பெறப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

$  இறந்த கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்வதற்கான பாதுகாக்கப்பட்ட பைகளை சவக்கிடங்கிற்கு வாங்கி அளிக்கப்பட்டது.

$  மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளை கொரோனா தடுப்பு மையம், அரசு மருத்துவமனைகளில் இருந்து அழைத்து செல்வது மாநகராட்சி ஆலோசனையோடு செய்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை கடந்த 5 தினங்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

$  இரண்டு சக்கர வாகனத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சியின் ஊழியர்கள் நேரடியாக நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட வாங்கி விநியோகம் செய்து வருகிறார்கள்.

$  உதவி மையத்திற்கு அதிகாலை 4 மணிக்கு துவங்கி இரவு 1 மணி வரை கூட அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. முடிந்தவரை அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.  பறவைகள் பலவிதம் என்பது போல் வரும் அழைப்புகள் பலவிதமாக அச்சத்தின் விழிம்பில் ஏது செய்வது என தெரியாமல்  திக்கற்று கேட்கின்றனர். அவர்களை ஆற்றுப்படுத்தி நம்பிக்கை அளித்து தொடர்ந்து மருத்துவத்திற்கு உரிய இடத்தை கண்டறிந்து சொல்ல ஒரு நபரின் அழைப்பிற்கு 25 முதல் 50 அழைப்புகளை இதர இடங்களில் செலவழிக்க வேண்டியுள்ளது.

$  இன்னும் சில நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 24 மணிநேரம் 100க்கான அழைப்புகளை செலவழித்து கண்காணித்து அவர் சிகிச்சை பெற துவங்கி விட்டார் என்கிற நிலை வரை சலிப்பற்று பொறுமையாக தோழர்களின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது என்றால் மிகையல்ல.

$  நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைக் குறிப்புகளை உடனுக்குடன் நமது மருத்துவர்களுக்கு அனுப்பி அதிகப்பட்சம் 10நிமிடத்திற்கு மேற்கொண்டு எத்தகைய சிகிச்சை பெறுவது என்ற ஆலோசனை பெற்று நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவது கொரோனா தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தி உரிய சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்கிறது.

$  இதே போன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் ஊழியர்களும் மகத்தான பணியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்ககது.

$  தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பல அமைப்புகளோடு இணைந்து தொடர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள், பிளாண்ட் அமைப்பது போன்ற திட்டத்தை துவக்கியுள்ளோம்.

மேற்படி உதவி மையத்தின் மூலம் இரண்டு அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு செய்யவேண்டிய பணியை துல்லியமாக இந்த உதவி மையத்திற்கு வரும் தகவல்கள் அடிப்படையில் தலையீடு செய்யப்படுகிறது. வாய்ப்புள்ள அம்சங்களில் நேரடியான உதவிகளை அரசை எதிர்நோக்கி காத்திராமல் செய்துவருகிறோம்.

இக்காலத்தில் மாநில முதல்வர் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி முதல்வர், மண்டல சுகாதாரத்ளதுறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், நகர் நல அதிகாரி  மற்றும் துறை சார்ந்த கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரின் கவனத்திற்கு  தேவையான கோரிக்கைகளை  தொடர்ந்து கொண்டு சென்று அவ்வப்போது தலையீடு செய்ய வைத்துள்ளோம்.  தேவைப்படும் தருணங்களில் மாநிலத்தலைமையின் வழிகாட்டுதல், ஆலோசனையோடு அரசின் கவனத்திற்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம்.  “நாம் மக்களிடம் போவோம், நோயுற்றவரின் ஒவ்வொரு வீட்டுக்கும் போக வேண்டும், நகரத்திலிருந்து கிராமத்துக்கு, ஒரு கதவிலிருந்து இன்னொரு கதவுக்கு’’  என்ற கனடா மருத்துவர் நார்மன் பெத்யூன் அவர்களின் வழியில் உதவி மையம் செயலாற்றுகிறது.

செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)