மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் (வயது 69) கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானார்.
திருப்பூரில் வசித்து வந்த தோழர் கே.தங்கவேலுக்கு மனைவி த.சாந்தாமணி மற்றும் மகள்கள்கவிதா, பிரியா ஆகியோர் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.சாதாரண தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த தங்கவேல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி படித்தவர். அதன் பிறகு இளம் வயதிலேயே பனியன் கம்பெனி தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். தொழிலாளர் உரிமை காப்பதற்காக சிஐடியு சங்கத்தில் இணைந்து முனைப்புடன் செயல்பட்டு சிஐடியு ஊழியராக, சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1978ஆம் ஆண்டு திருப்பூர் மேற்குப் பகுதி விசைத்தறித் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம், 1984ஆம் ஆண்டு திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் பஞ்சப்படி கோரி 127 நாள் நடத்தியபோராட்டங்களில் களப் போராளியாக, முன்னணி நிர்வாகியாக வழிகாட்டி, உறுதிமிக்க தலைவராக உயர்ந்தார்.சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கிய ஆரம்ப காலத் தலைவர்களில் கே.தங்கவேலும் ஒருவர். திருப்பூரில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநில அமைப்பு மாநாடு வெகு சிறப்பாக நடைபெறுவதில் கே.தங்கவேலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.1974ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கே.தங்கவேல், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி தலைவராக உயர்ந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1986ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கோவை மாவட்டக்குழுச் செயலாளராக அவரது 34ஆவது வயதில் தேர்வு செய்யப் பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுஉறுப்பினராகவும், பின்னர் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் கடைசி வரை செயல்பட்டு வந்தார். கட்சியின் ஸ்தாபனக் கட்டுப்பாட்டில் தெளிவும், உறுதியும் கொண்ட தங்கவேலின் அணுகுமுறை, பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி கட்சி அமைப்பை ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்தி சிறப்புடன் வளர்த்ததில் கே.தங்கவேலின் பணி தனித்துவமானது.
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக ஐந்தாண்டு காலம் செயல்பட்டார். 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலம் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். அக்காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பினால் முடங்கிய திருப்பூர் சாயஆலைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டார். அதேபோல் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், மீட்புப் பணிகளிலும் வீதிகள்தோறும், வீடுகள் தோறும் சென்று பணியாற்றினார். அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன், தங்கவேலின் பணியை நேரில் பார்த்து, நாங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுகிறோம், நீங்கள் இவ்வளவு தூரம் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். எனினும் இப்பிரச்சனையில் முழுமையாக ஈடுபாட்டுடன் மக்கள் தொண்டாற்றினார்.
கே.தங்கவேல் தீவிர வாசிப்புப் பழக்கம் உடையவர். பள்ளிப் படிப்புடன் அவரது முறையான கல்வி முடிந்தாலும் வரலாறு, தத்துவம், அறிவியல்,கதை, கவிதை, நாவல் இலக்கியம் என தேடித்தேடிப் படிக்கும் தீவிர வாசிப்பு பழக்கம் கொண்டவர். அவரது அறையே ஒரு நூலகமாகத்தான் காட்சியளிக்கும். திட்டமிட்டு உழைப்பது, நேர நிர்வாகம் ஆகியவற்றை தனது அன்றாட வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்ட கே.தங்கவேல் பல கல்விநிறுவனங்கள், பயிற்சி மையங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு நேர நிர்வாகம், ஆளுமைப் பயிற்சி ஆகிய வகுப்புகளை நடத்தி இருக்கிறார்.மனித உறவுகள் தொடர்பாக அக்கறையுடன் கவனம் செலுத்தி கட்சி தோழர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் இணக்கமான உறவு கொண்டு இன்முகத்துடன் பழகி, அவர்களது குடும்பம் உள்ளிட்ட உறவுச் சிக்கல்களை எளிய முறையில் அனைவரும் ஏற்கும் விதத்தில் தீர்த்து வைக்கக் கூடியவர்.அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து கட்சியினரிடமும் நல்லுறவு கொண்டிருந்தார்.
மாற்றுக் கட்சித் தலைவர்கள், ஊழியர்களிடமும் அவர்களது உடல்நலன் குறித்து அக்கறை கொண்டு ஆலோசனை கூறக்கூடியவர்.வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்களை தேடித் தேடிச் சென்று கலந்துரையாடும் பழக்கத்தைதொடர்ந்து பின்பற்றினார். தொல்பொருள் அகழாய்வு, கீழடி, கொடுமணல் ஆகியவற்றிலும் ஈடுபாடுகாட்டி வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். திருப்பூர் மாநகரின் பண்பாட்டு அடையாளமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பங்கேற்று, அதை சிறப்புடன் மேம்படுத்துவதில் ஆலோசனைகள் வழங்கி வந்ததுடன், புத்தக கண்காட்சிகளில் புதிய புத்தகங்களைத் தேடி வாங்குவது, படைப்பாளிகளுடன் உறவு கொள்வதிலும் தனிகவனம் செலுத்தினார்.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், தோழர்களின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் அலைபேசிகளில் அழைத்து கவனமாக இருக்கும்படி அறிவுறுத்திக் கொண்டிருந்தார். தோழர் கே.தங்கவேல் மருத்துவ சிகிச்சையின்போது துணிவுடன் இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.கம்யூனிஸ கோட்பாடுகளை சொல்லில் அல்லாமல் செயலிலும், உணர்விலும் இரண்டறக் கலந்துகடைப்பிடித்து வாழ்ந்தவராக தோழர் கே.தங்கவேல் திகழ்ந்தார்.
===வே.தூயவன்===