அவிநாசி, ஏப். 28-அவிநாசி அடுத்த அரசம்பாளையத்தில், குடிநீர் மேல்நிலை தொட்டியிருந்து தண்ணீரை திருடி விற்பனை செய்யும் மினி லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட அரசம்பாளையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பயன்பாட்டிற்காக அரசு பள்ளி அருகில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் சனியன்று இரவு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ள குழாயிருந்து கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் குழாய் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தனர். இதையறிந்த பொதுமக்கள் இங்கு தண்ணீர் பிடித்து விற்பனை செய்ய கூடாது என தெரிவித்தனர். ஆனால் அவர்கள், பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டு தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தனர். இதில் ஆவேசமடைந்த பொதுமக்கள் மினி லாரியை சிறைபிடித்தனர். இதையடுத்து மினி லாரி ஓட்டுனர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பொதுமக்கள் அவிநாசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் மூன்று மணி நேரம் கடந்துதான் வந்தனர். இதனால் பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட மினி லாரியுடன் மூன்று மணி நேரம் காத்திருந்தனர். இதன்பின் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மினி லாரியை பறிமுதல் செய்யுமாறு காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவிநாசி காவல்துறையினர் மினி லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேல்நிலைத் தொட்டிக்கு போதுமான தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இந்நிலையில் தண்ணீர் திருடப்பட்டால், இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளவார்கள்.ஆகவே தண்ணீர் திருட்டை மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.