திருப்பூர், ஏப்.19- அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வியாழனன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் அங்கு செய்தி சேகரித்து கொண்டிருந்த மற்ற செய்தியாளர்களையும் சிலர் மிரட்டியுள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் செய்தியாளர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் விதமாகவே கருதப்படுகிறது. இது போன்ற வன்முறைச் சம்பவங்களை திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமே இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு தடுக்க முடியும் எனவும் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.