tamilnadu

சட்டவிரோதமாக மது விற்பனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்

அவிநாசி, மே 21 – சேவூர் அருகே மங்கரசு வலையபாளையம் ஊராட்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்து மங்கரசு வலையபாளையம் பொதுமக்கள் திங்களன்று சேவூர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம்,அவிநாசி வட்டம், மங்கரசு வலையபாளையம் ஊராட்சியில் மொத்தம் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் மங்கரசு வலையபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வைத்தியங்குட்டை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகிறார். இதனால் இப்பகுதியில் உள்ளஇளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பலர் வேலைக்கு செல்லாமலும், இன்னும் சிலர் கிடைக்கும் பணத்தை மது அருந்தவே செலவிடுவதாலும் பல குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகமாக வருகிறது. எனவே மேற்படி சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் நபர்களை கைது செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.