districts

img

பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழப்பு: முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என பொதுமக்கள் புகார்

வேலூர் ஜூன் 1- வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் குமார். இவரது மனைவி சுடர்மதி. இவர்களது மகன் அஸ்வின்ராஜ் (8). இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அஸ்வின்ராஜுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டதால் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.  அங்கு இரவு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் முகுந்தன் இல்லாததால், பணியில் இருந்த செவிலியர், மருத்துவரிடம் அலைபேசியில் தகவல் பெற்று ஊசி போட்டு, மாத்திரை கொடுத்துள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுவன் மீண்டும் வாந்தி எடுத்ததோடு, இதயத் துடிப்பும் அதிகமானது. உடனே பதறிப்போய் சிறுவனின் பெற்றோர் அங்கிருந்த செவிலியரிடம் கேட்ட பொழுது அதெல்லாம் சரியாகிவிடும் ஈரத்துணியை நனைத்து நெற்றியில் வையுங்கள், காலையில் குழந்தைகள் நல மருத்துவர் வருவார், அவரிடம் மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

விடிந்த பிறகும் பணி மருத்துவர் வராததால் குழந்தையின் பெற்றோர் சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து வரச்சொல்லி அனுப்பி உள்ளார். ஸ்கேன் எடுப்பதற்காக குடியாத்தம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது சிறுவன் தனது நாக்கை கடித்து உள்ளான். உடனே பெற்றோர் மீண்டும் சிறுவனை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு சிறுவனின் இறப்புக்கு மருத்துமனையின் அலட்சியமே காரணம் என்றும், பணி நேரத்தில் அங்கு இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், மருத்துவ இணை இயக்குநர், மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் கோபி, பேர்ணாம்பட்டு காவல் துறை ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் கோபி, அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவமனையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டதையடுத்து, சொந்த ஊரான நரியம்பட்டில் சிறுவன் அஸ்வின்ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் செவ்வாயன்று (ஜூன் 1) குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய வருவாய் கோட்டாட்சியர் பணி நேரத்தில் அங்கு இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று உள்ள இக்காலத்தில் பல்வேறு பணிகளுக்கு இடையே பணியாற்றும் மருத்துவர்களுக்கிடையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மருத்துவர்களின் பணிச்சுமையை கணக்கில்கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக மருத்துவர்களையும், ஊழியர்களை நியமிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.