திருப்பூர், மே 4 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்த ஏழை கைத்தறி தொழிலாளியின் மகன் பொ.சபரிநாதன் அரசுப் பள்ளியில் படித்து ஜேஇஇ எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.பல்லடம் வட்டம் கணபதிபாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவரும் கைத்தறித் தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் மகன் பொ.சபரிநாதன் கணபதிபாளையம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அண்மையில் (ஏப்.19) வெளியான பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 573 மதிப்பெண்களுடன் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார்.இந்நிலையில் ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ எனப்படும் நுழைவுத்தேர்வுக்கு சபரிநாதன் படித்து வந்தார். கடந்த ஏப்.8-ம் தேதி நடந்த நுழைவுத்தேர்வை அவர் எழுதினார். ஏப்ரல் 29ஆம் தேதி ஜேஇஇ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.29 சதவிகிதம் மதிப்பெண் பெற்று சபரிநாதன் வெற்றி பெற்றார். திருப்பூர் மாவட்டத்தில் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற ஒரே மாணவர் சபரிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளியில் படித்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறார். இவரது இந்த வெற்றி தொடர்பாக கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் செய்தியாளரிடம் கூறுகையில், ”சபரிநாதன் நன்கு படிக்கக்கூடிய மாணவர்.
ஜேஇஇ நுழைவுத்தேர்வு (மெயின்) எழுத விரும்பினார். இதற்காக பிளஸ் 2 காலாண்டு விடுமுறையின்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட ’தொடுவானம்’ என்ற பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். தேர்வுக்காக ஆசிரியர்கள் சொந்தமாக பயிற்சி புத்தகங்கள் வாங்கித் தந்தோம். அவரும் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்தார்.ஜேஇஇ மெயின் தேர்வில் இந்திய அளவில் 2.24 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சபரிநாதன் 28,206ஆம் இடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றிருப்பது கூடுதல் சிறப்பு” என்றார்.இந்த சாதனையைச் செய்த மாணவர் சபரிநாதன் கூறுகையில், ”மிகவும் ஏழ்மையான நிலையில் தான் படித்தேன். தொடர்ந்து எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தந்த உற்சாகம் என்னை இந்தளவு தேர்ச்சி பெற வைத்துள்ளது. வீட்டில் கைத்தறி தொழில்தான். மாதம் ரூ.3 ஆயிரம் தான் குடும்ப சம்பாத்தியம். அதை வைத்துதான் குடும்பம் நடத்த வேண்டும். 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் படித்து வந்தேன். எதிர்காலத்தில் இஸ்ரோவில் பணிபுரிய விருப்பம் உள்ளது. தற்போது ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போதைய நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர முடியும். மே 27ஆம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத உள்ளேன். அதற்கு தற்போது படித்து வருகிறேன். அதில் வெற்றிபெறும்பட்சத்தில் ஐஐடியில் சேர வாய்ப்பு கிடைக்கும். எனக்காக பாடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் பயிற்சிக்கும் நன்றி என்று கூறினார்.