திருநெல்வேலி, மே 26 -நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பலஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் 11 அணைகள் உள்ளன. இதில்அதிக கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய அணையாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி,மொத்த கொள்ளளவு 5511 மில்லியன் கன அடி.அதற்கு அடுத்ததாக பாபநாசம் அணை மிகப் பெரிய அணையாக உள்ளது. இதன் மொத்த அடி 143,கொள்ளளவு 5500 மில்லியன் கன அடி. இது போக சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன. இந்த 11 அணைகளில் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பு இருக்கும். இந்த அணைகளில் தண்ணீர் இல்லாவிடில், குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.தற்போது பாபநாசம் அணையில் சகதியும், தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளது.குடிநீருக்காக குறைந்தது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியே செல்கிறது. இதனால் குடிநீருக்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது. மணி முத்தாறு அணையில் தற்போது 64.31 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 275 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் பச்சையாறு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இப்போது பச்சையாறு பகுதியில் உள்ள ஆகாய தாமரைகள் தாமிரபரணி ஆறு வரை பரவி உள்ளன. இதன் மூலம்நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையிலும் தற்போது 47.41 அடியாக நீர்மட்டம் உள்ளது. பாபநாசம் அணையிலும் சகதி தண்ணீர் மட்டும் உள்ளதால் அந்த அணையில் மற்ற பகுதிகள் வறண்டு விட்டன. அணையின் அடிப்பகுதியில் உள்ள மரங்களின் வேர் பகுதி மட்டும் காய்ந்து வெளியே தெரிகிறது.இதுபோல கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இங்கு பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் மணல் நிரம்பி சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. இந்த அணைகளின் ஒரு ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் போல் லேசாக தண்ணீர் கசிந்து செல்கிறது.இதனால் இந்த அணைகளில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பா நதியிலும் பல ஆண்டுகளாக தூர்வாராமல் 23 அடி வரை மணல் நிரம்பிஉள்ளது. அதன் மேல் 1.5 அடி உயரத்துக்கு சிறிதளவு தண்ணீர் உள்ளது. மற்றபடி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.இதுபோல குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நீரோட்டம் இல்லாததால் இந்த அணைகளும் வறண்டு விட்டன. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளும் வறண்டு மழைக்காக காத்திருக்கிறது.எப்போதும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும் அகத்தியர் அருவியில் தற்போது மிக குறைவாகவே தண்ணீர் விழுகிறது. குற்றால அருவிகளில் எந்த அருவியிலும் தண்ணீர் விழவில்லை. குற்றாலம் மெயினருவி முற்றிலுமாக வறண்டுகாணப்படுகிறது. இதனால் தற்போது மணிமுத்தாறு அணைநீர்மட்டத்தை வைத்து குடிநீர்தேவை மட்டும் சமாளிக்கப்படுகிறது.வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டும். சில ஆண்டுகளில் முன்னதாக மே கடைசி வாரமே தென்மேற்கு பருவமழை பெய்து விடும். எனவே தென்மாவட்ட மக்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தென்மேற்கு பருவமழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 ஆணைகளுக்கும் தண்ணீர்வரும். இல்லாவிடில் கடும் குடிநீர்பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.