தலித் மணமக்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு பூட்டு போட்ட சாதி ஆதிக்க சக்திகள்
அரியலூர், நவ.11- அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமக்கள் திருமணம் செய்ய இருந்த நிலையில், கோவிலுக்கு பூட்டு போட்டு சாதி ஆதிக்க சக்திகள் அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. செந்துறை அருகே உள்ளது சொக்கநாதபுரம். இங்கு இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் ஞாயிறன்று, அருகில் உள்ள நம்மங்குணம் கிராமத்தைச் சேர்ந்த அருண் ஸ்டாலின் - திவ்யா ஆகிய மணமக்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்திகள் அக்கோயிலுக்கு பூட்டு போட்டனர். பின்னர் போலீசார் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் சாதி ஆதிக்க சக்திகள் பேச்சுவாரத்தை நடத்தி சாவியைப் பெற முயற்சித்தனர். ஆனால் இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கோயில் பூட்டு உடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருண் ஸ்டாலின், திவ்யா தம்பதியின் திருமணம் திட்டமிடப்பட்ட நேரத்தை விட சுமார் 2 மணிநேர தாமதத்துக்குப் பின்னர் நடைபெற்றது. முன்னதாக, அரியலூரில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்ய இந்த மணமக்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அங்கு அதிகளவிலான திருணங்கள் நடத்த ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டதால் அக்கோயிலைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதன்பின்னர் தான் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படியும், மேலும் மணமகனின் சொந்த ஊரான நம்மங்குணம் கிராமத்தின் அருகில் அமைந்துள்ளதாலும், சொக்க நாதபுரம் கோயிலில் திருமணம் செய்ய நவம்பர் 7அன்று உரிய கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர். தலித் மணமக்களின் திருமணத் தகவல் சனிக்கிழமை இரவில் அப்பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்திகள் அறிந்துகொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இரவோடு இரவாக அவர்கள் அக்கோயிலுக்கு பூட்டு போட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மணமக்களின் உறவினர் சசிகுமார் அறிந்துகொண்டு, போலீசார் மற்றும் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அப்பகுதியின் வருவாய்த்துறை அதிகாரி ஜெ.பாலாஜி மற்றும் செந்துறை தாசில்தார் தேன்மொழி ஆகியோர் அந்த கிராமத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் 3 பூட்டுகளுக்கான சாவியைப் பெற்றுள்ளனர். இருப்பினும் மற்ற 2 பூட்டுகளும் உடைத்து திறக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் முகூர்த்தம் குறிக்கப்பட்ட நிலையில், சுமார் 100 போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மதியம்1:30 மணியளவில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. அனைத்து விசாரணையும் நடைபெற்ற பின்னர் இதற்கு காரணமான வர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.