tamilnadu

நீடிப்பதற்கு தகுதியற்றது எடப்பாடி அரசு

கோவில்பட்டி/திருவாரூர், ஏப். 9-

தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக மிக மோசமான ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி என்றும் ஐந்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும் தங்களது சாதனைகளாக எதையுமே சொல்ல முடியாத நரேந்திர மோடி புதிய வாக்குறுதிகளை கூறி மீண்டும் மக்களை மோசடி செய்ய முயற்சிக்கிறார் என்றும் இவர்களை இத்தேர்தலில் வீழ்த்தி மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி மலர தமிழக வாக்காளர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று தங்களது தமிழகப் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் அழைப்பு விடுத்தனர். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்தும், தமிழகத்தின் இதர தொகுதிகளில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.செவ்வாயன்று, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, கோவில்பட்டியில் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றினார். மாலையில், மதுரை கோ.புதூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உரையாற்றினார்.திருவாரூரில் திங்களன்று இரவு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி சிபிஐ வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பிரகாஷ் காரத் உரையாற்றினார்.