புதுதில்லி:
2024-25 நிதியாண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் (ரூ. 350 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவோம் என்று நரேந்திர மோடி அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போதைய சூழலில் அந்த இலக்கை அடைவதற்கான சாத்தியமில்லை என்று பொருளாதார வல்லுநர் வம்சி வகுலாபரணம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மசாசூஸெட்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரான வம்சி வகுலாபரணம், இதுதொடர்பாக பிடிஐ செய்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “நாட்டின் தற்போதைய பொருளாதார மதிப்பு சுமார் ரூ. 210 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் இந்த மதிப்பு ரூ. 350 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டுமானால், நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 13 சதவிகித வளா்ச்சி காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“ரிசா்வ் வங்கி, சா்வதேச நிதியம் ஆகியவை கணித்துள்ளபடி நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்தாலும், பொருளாதார மதிப்பானது அடுத்த சில ஆண்டுகளுக்குக் கடந்த 2019-ஆம் ஆண்டில் காணப்பட்ட வளர்ச்சியை விடக் குறைவாகவே இருக்கும்” என்று கணித்துள்ளார்.“தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பரவலால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். பணவீக்கத்தால் ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.