திருவாரூர்:
டெல்டா மாவட்டங்களுக்கு கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட ஒரு வார காலத்தில் வழக்கமாக சாகுபடி பணிக்கு தண்ணீர் வந்து சேரும். ஆனால் இந்த ஆண்டு 20 நாட்களுக்கு மேலாகியும் ஆறுகளில் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடந்த 31ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
அரசு மற்றும் பொதுப்பணித் துறையின் அலட்சியத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடுமையாக கண்டிப்பதுடன் இரண்டொரு நாட்களில் நிலைமை சீரடையவில்லை என்றால்மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கை, தமிழக அரசு இந்த ஆண்டு பருவ மழையின் மூலமாக தண்ணீர் கிடைத்த போதும் அதனைக் காலத்தோடு கடைமடை வரை கொண்டு சேர்த்து சம்பாசாகுபடி சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மாறாக குடிமராமத்து பணியை தொடங்கி அவசர கதியில் செய்து வருகிறது. இதனால் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முறையாக செப்பனிடாமல் சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்காமலும் விவசாயிகளின் வாழ்வில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில்மட்டும் சுமார் 2.50 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ள்ளன. குறிப்பாக கடைமடை பகுதிகள் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
வெண்ணாறு
நீடாமங்கலம் வெண்ணாறு, மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலமாக கோரையாற்று பாசனத்தில் 1.20 லட்சம் ஏக்கர், வெண்ணாறு பாசனத்தில் 94 ஆயிரம் ஏக்கர், பாமணி ஆற்றுப் பாசனத்தில் 38 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி பணி வழக்கமாக நடைபெறும். இப்பணியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 991 விவசாயிகள் ஈடுபடுவர். குறிப்பிட்ட காலத்தில் சாகுபடி பணி நடைபெற்றால்தான் குறிப்பிட்ட விளைச்சல் இலக்கை எட்ட முடியும். ஆனால் தற்போது உள்ள சூழலால் இங்கு பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் அரசுஅசைவற்று இருக்கிறது. மூணாறு தலைப்பிலிருந்து ஒவ்வொரு பாசன பிரிவிலும் சுமார் 20 ஆயிரம் கன அட்சி தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் கடைமடை வரை விவசாய நிலங்கள் நனைந்து விளைச்சல் உருவாகும். ஆனால் பெயரளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், குடிமராமத்து பணியாலும் நீரோட்டம் தடைபட்டுள்ளது. விவசாயிகளின் முக்கியமான இந்த நேரத்தில் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் அரசின் நிர்வாகம் மெத்தனத்தில் இருப்பது போல் தெரிகிறது. இதனால் விவசாய பெருமக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
இரண்டொரு நாட்களில் தேவையான அளவிற்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தால் மாவட்டம் முழுவதும் பெருமளவிலான விவசாயிகளைத் திரட்டி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலைக்கு விவசாயிகளை தள்ளி விடாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.