கும்பகோணம், ஆக.25- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரில் புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி ஆயிரம் ஆண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அகழியும் இருக்கிறது. சமீபகாலமாக அகழியின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அதற்கான அடையாளத்தை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில் பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பந்தநல்லூர் அகழியை தூர்வாரி நீராதாரத்தை காக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக மூன்று வாரத்திற்குள் தூர்வார வேண்டும். அகழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் இரண்டு வார காலமாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் திரண்டு அகழியை தூர்வார வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த வந்த திருவிடைமருதூர் வட்டாட்சியர், பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கு, இன்னும் ஒரு வாரம் காலக்கெடு இருக்கிறது அதற்குள் அவர்கள் ஆக்கிரமிப்பை அவர்கள் நீக்கிக் கொள்ள வேண்டும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணையை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில், நீர் நிலைகளை தூர்வார விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை நீக்கி தூர்வாரவில்லை என்றால் பந்தநல்லூரை சுற்றியுள்ள நாற்பது கிராம பொதுமக்களையும் அரசியல் கட்சியினரையும், மாணவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.