காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி, சச்சிதானந்தம் எம்.பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (92) வயது மூப்பு காரணமாக இன்று 12.15 மணி அளவில் காலமானார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
கடந்த ஆண்டு விடுதலை நாள் விழாவில் அய்யா குமரி அனந்தனுக்குத் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கிய தருணத்தில், அவர் என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு உறவாடிய நினைவுகள் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்க - அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினேன்.
அவரைப் பிரிந்து வாடும் அருமைச் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.
தகைசால் தமிழர் அய்யா குமரி அனந்தன் அவர்களது பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.
சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்:
“தகைசால் தமிழர்" தமிழகம் அறிந்த தலைவர் ஐயா குமரி அனந்தன் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்னும் செய்தி வருத்தமளிக்கிறது.
தனது ஆற்றல்மிகு பேச்சால் தமிழகத்தின் வீதிகளை ஆட்கொண்டவர். சமய நல்லிணக்கத்தையும் எந்நாளும் போற்றிய அவரை இழந்து வாடும் உறவினர்கள் , நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆர்.சச்சிதானந்தம் எம்.பி இரங்கல்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கிய செல்வர் என அன்போடு அழைக்கப்பட்ட குமரி அனந்தன் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றிய, தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற குமரி அனந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.