காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேசப்பற்று மிக்கவருமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் முதிர்ந்த தேசியவாதியாகவும், ஆற்றல் வாய்ந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். பண விடைத்தாளைத் தமிழில் கொண்டு வருவதற்காகவும், பனை மரத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவும் அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறப்படும். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக அதிகமான முறை நடைப்பயணத்தை மேற்கொண்டவர்.
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற அவர் மதச்சார்பற்ற சக்திகளுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார். அரசியல் மேடைகளில் இலக்கியச் சுவையோடு பேசும் அவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்படச் செயல்பட்டார்.
அவரை இழந்து வாடும் காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.