tamilnadu

தொடக்கக்கல்வி இயக்குநர் பெயரில் கையெழுத்து ரூ. 1 கோடியே 25 லட்சம் மோசடி

தஞ்சை, ஜூன் 15- தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் விதிகளுக்குப் புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள், நியமிக்கப்பட்டனர். ஆனால் 1995 முதல் 98 வரையிலான காலகட்டத்தில் அவர்களின் நியமனம் செல்லாது என உத்தரவிட்ட தொடக்கக்கல்வி இயக்குநரகம், 2003 ஜூன் முதல் பணி நியமன ஆணை வழங்கி அன்று முதல் சம்பளத்தைக் கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் 42 ஆசிரியர்களில் 12 பேருக்கு அவர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட 1995 முதலான காலத்தைக் கணக்கில் கொண்டு ரூ. 1 கோடியே 25 லட்சம் சம்பளமாக வழங்கத் தொடக்கக் கல்வி இயக்குநரின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி ஒரு உத்தரவைத் தயாரித்து தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரே அரசுக் கருகூலத்துக்கு அனுப்பியது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதையடுத்து தஞ்சை திருவாரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உடனடியாக 1 கோடியே 25 லட்சம் ரூபாயைக் கணக்கிட்டு 12 பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து திரும்பப்பெற்று ஒப்படைக்கத் தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.