tamilnadu

பூலாங்கொல்லை அரசுப் பள்ளிக்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை

 தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த பூலாங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று வீசிய கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனால் கடந்த 15 மாதங்களாக பள்ளி மாணவ, மாணவிகள் குடிநீருக்காக தவித்து வந்தனர். இந்நிலையில் தற்போதைய ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அப்பள்ளியில், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் ஆய்வு மேற்கொண்டார். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் உடனடியாக குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார். அப்போது உதவி பொறியாளர் கதிரேசன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் குழ.செ.அருள்நம்பி, நாடியம் பாமா செந்தில்நாதன் மற்றும் கொளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காசியம்மாள் மணி ஆகியோர் உடனிருந்தனர்.