தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த ஜனவரிமாதம் பெய்த எதிர்பாராத மழையினால் பல்வேறு இடங்களில் விவசாய பெருங்குடி மக்கள் உழைத்து விதைத்த நெல் பயிர்கள் அறுவடைக்கு வரக்கூடிய தருணத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. அனைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய நிலங்களை கணக்கீடு செய்து அறிக்கையை, தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். அதனடிப்படையில், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தற்போது மீதமுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது நமது மாவட்டத்தில் 560 நெல் அறுக்கும் இயந்திரம் இப்போது செயல்பாட்டில் உள்ளது. அதுபோன்று 281 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.விவசாயிகளிடமிருந்து தற்போது வரை 2 லட்சத்து 33 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படுகிற பட்சத்தில், வேளாண்மைத்துறை, தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம்ஒருங்கிணைந்து உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நெல் கொள்முதல் நிலையத்தில் பொதுமக்களுக்கு, விவசாயிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தாலும் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க, புகார் எண் உடைய பதாகை அந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள இலவச 1077 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அதற்கு தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்றார்.