தஞ்சாவூர், ஜூன் 29- பிளஸ் 2 பொதுத் தேர்வில் உயர் மதிப் பெண்களுடன் அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளியின் மகள் மேல்படிப்பு, வறுமை காரணமாக கேள்விக்குறியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையைச் சேர்ந்த வர் திருக்குமரன் (45). இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குணவதி (38). இவர் கீற்று முடையும் வேலைக்கும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாளராகவும் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அட்சுதா (17) குருவிக்கரம்பை அரசு மேல் நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வில் 572 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு ஹரிஹரன் (9) என்ற நான்காம் வகுப்பு படிக் கும் தம்பி ஒருவர் உள்ளார். இவர்கள், அங்குள்ள மெய்யப்பன்கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றில் குடிசை வீட்டில் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவி அட்சுதா 600-க்கு 572 பெற்று பள்ளியிலேயே முதல் மாணவி யாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழில் 98, ஆங்கிலத்தில் 89, உயிரியலில் 91, வேளாண் அறிவியலில் (செய்முறை) 100, வேளாண் அறிவியலில் (கருத்தியல்) 94, கணினி தொழில்நுட்பத்தில் 100 என மொத்தம் 572 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 395 மதிப் பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. மாணவி அட்சுதா, தனது குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவியும் ஏதே னும் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். இதுகுறித்து மாணவி அட்சுதா கூறுகை யில், “எனக்கு கால்நடை மருத்துவம், வேளாண் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் உள்ளது. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நான் இந்த படிப் புக்கு விண்ணப்பித்தால், எனக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கே அல்லாடி வரும் சூழலில், என் பெற்றோர்களால் எனது மேற்படிப்புக்கு உதவ முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனக்கு உதவி னால் எனது மேற்படிப்பை தொடர முடியும். இல்லாவிட்டால் எனது குடும்பத்திற்கு சிரமம் தராமல், கிடைக்கும் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும்” என்றார் கண்ணீருடன். குருவிக்கரம்பை பள்ளி தலைமை ஆசிரி யர் வீ.மனோகரன் கூறுகையில், “படிப்பில் ஆர்வமுள்ள மாணவி அட்சுதா, தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலையில் இருக்கிறார். அவருக்கு அரசு, தன்னார்வ நிறுவனங்கள் உதவினால் உயர்நிலையை அடைவார் என்பது உறுதி” என்றார். மாணவி அட்சுதா மேற்படிப்புக்கு தமிழக அரசு, சமூக ஆர்வலர்கள் உதவ முன்வர வேண்டும்.