தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில், கடந்த 1978-81 ஆம் ஆண்டு 10, 11,12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து நண்பர்கள் சங்கம விழாவினை பள்ளி விழா அரங்கில் நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வி.மனோகரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் ராமச்சந்திரன் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் என்.வெங்கட்ராமன், அ.குணசேகரன், வி.ராமநா தன், ஏ.ஜெயராமன், குணசேகரன், முருகையன், கோவிந்தன், ஏ.டி.பன்னீர்செல்வன், கோவிந்த சாமி, லலிதா, சி.பன்னீர்செல்வம், பள்ளி முன்னாள் உதவியாளர் சோமசுந்தரம் ஆகியோர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவரும், அதே பள்ளியில் தற்போது தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் வி.மனோகரனுக்கு நல்லாசிரியர் விருதை முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் வழங்கினர். தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு களில் இருந்தும் குடும்பத்துடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள், பழைய நினைவுகளை பகிர்ந்தும், தங்கள் நண்பர்களுடன் கட்டிப்பிடித்து அளவளாவியும் குதுகாலித்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிறைவாக முன்னாள் மாணவர் இளங்கோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் என்.பி.சுரேஷ், வி.அசோகன், எம்.நீலகண்டன், வி.பாலசுப்பிரமணியன், ராஜவர்மன், பழனியப்பன், ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிப்பெட் நீலகண்டன், ஜெயலெட்சுமி, சாந்தா, நீலா, மாலா செய்திருந்தனர்.