தஞ்சாவூர், மே 13- ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக வீடுகளில் முடங்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியர்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தஞ்சாவூர் பேராவூரணி பகுதி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நலிவடைந்த மாணவர்களின், பெற்றோர் 60 பேருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் வீ.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 250 பேர் குடும்பங்களுக்கு, ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியர் மு.கருணாநிதி, இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட அமைப்பாளர் பிச்சைமணி, சங்க ஆசிரியர்கள் தமிழ்செல்வன், இராமநாதன், தமிழரசன், பல் மருத்துவர் ராஜசேகரன் கலந்து கொண்டனர் செங்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 100 மாணவர்கள் குடும்பங்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் எம்.கணேசன், ஊராட்சி தலைவர் செல்வம் கலந்து கொண்டனர். அனைத்து நிகழ்வுகளும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஏ.பிரகாஷ் தலைமையிலும், பள்ளி ஆய்வாளர் மாதவன் முன்னிலையிலும் நடைபெற்றது. அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவிகளின் குடும்பத்திற்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் கொரோனா நிவாரண உதவிகளை செய்தனர். தலைமை ஆசிரியர் கார்த்திகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர்(பொ) முத்துகணேஷ், காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருநாவுக்கரசு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக ராசு, ஹாரிஸ் ஆகியோர் 100 மாணவிகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள், கபசுரக் குடிநீர் பொடி ஆகியவற்றை வழங்கினர். மாணவிகள் பெற்றோர்கள் தனிநபர் இடைவெளிவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.