tamilnadu

img

கஜா புயல் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படுமா?

தஞ்சாவூர்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், ஒரத்தநாடுஉள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. 

இதனா‌ல் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அரசு வழங்கிய இழப்பீடு என்பது ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்ற கதையாக அமைந்தது. அரசு வழங்கிய இழப்பீடு சிலருக்கு மட்டுமே கிடைத்த நிலையில், பல விவசாயிகள் 9 மாதங்களை கடந்த நிலையிலும், நிவாரணம் முழுமையாகக் கிடைக்காமல் வேளாண்துறை அலுவலகத்திற்கும், வருவாய்த் துறை அலுவலகத்திற்கும் நடையாய் நடந்து கொண்டுள்ளனர். 
அரசுத் தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், நில ஆவணங்களில் உள்ள பிரச்சனைகள், வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை குளறுபடிகளால் பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலையாகும். இந்நிலையில் திங்கள்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) சார்பில் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தென்னை விவ சாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் ஏ.கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், கோவிந்தராசு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது, “கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்று ரூ.120 க்கும், முழுத் தேங்காய் ரூ.51க்கும் கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீத மானியத்துடன் சொட்டுநீர் கருவிஅமைத்து தர வேண்டும். தமிழகத்தில் தேசிய தென்னை நலவாரிய கிளை அமைத்திட வேண்டும். அனைத்து தென்னை மரங்களையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திடவும், உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, “பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்வழங்கிட ரூ .6.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்” என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்,“அரசு கூடுதலான நிதியை பாதிக்க ப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.