மதுராந்தகம்,ஜன.03- தனியார் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் விவசாயி மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம்(62) விவசாயி. இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ரவி என்பருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதன்பேரில், கடந்த 2017ம் ஆண்டு அச்சிறுப்பாக்கத்தில் செயல்படும் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் பைனான்ஸ் மூலம் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகிய வாகனங்களை மாத தவணையில் ரவி வாங்கியுள்ளார்.
இதற்காக, ரவிக்கு மேற்கண்ட நிறுவனத்தில் நீலமேகம் ஜாமீன் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா தொற்றால், கடந்த ஆண்டு ரவியின் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால், மாதத் தவணை சரியாக கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் தவணை கட்டாததால் ரவியின் மேற்கண்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், ஜாமீன் கையெழுத்திட்ட நீலமேகத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் வட்டி தொகைக்கு ஈடாகிவிட்டதாகவும். முழுப்பணத்தை செலுத்தாவிட்டால், சொத்துகளை பறிமுதல் செய்வோம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து, நீலமேகம் தனது சொத்துக்களை விற்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதில், ஆன்லைன் மூலம் நிதி நிறுவனத்தினர் சொத்தில் வில்லங்கம் ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் நிதி நிறுவன ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், முறையான பதில் அளிக்காததால் செய்வதறியாமல் நீலமேகம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிறன்று (ஜனவரி 02) நிதி நிறுவன ஊழியர்கள் தொலைபேசி மூலம் நீலமேகத்தை தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும். இதில், தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நீலமேகம் உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் துன்புறுத்தலே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து, இறந்த நீலமேகத்தின் உடலை நிதி நிறுவன அலுவலகம் முன்பு வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸார், அப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் உறுதியளித்தனர்.
மேலும், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.