மயிலாடுதுறை:
நெற்பயிர்கள் மழையால் நாசமானதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி உடலுக்கு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நாகை உள்ளிட்ட கடைமடைப்பகுதிகளில் ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து இடைவிடாது பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம்ஏக்கர் நெல்பயிர்கள் மழைநீரில்மூழ்கி அழுகி நாசமாயின. கணக்கெடுப்புக்கு உத்தரவிடுகிறேன் எனமுதல்வர் பழனிசாமி அறிவித்த தோடு சரி. எந்த ஒரு அதிகாரியும் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்க்கவும் செல்லவில்லை, விவசாயி களின் ஆறுதலுக்கும் வழியில்லாமல் இந்த நிலையில் நாகப்பட்டினம் அருகே ரயில் முன் பாய்ந்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை சட்டையப்பர் மேல வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (58). அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். திருக்குவளையை அடுத்த மோகனம்பாள்புரத்தில் 10 ஏக்கர் நிலம் இவருக்கு உள்ளது. அதில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் சேதமடைந்து அழுகி போய்விட்டது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ரமேஷ்பாபு சனியன்று மதியம் ஆவராணி என்ற பகுதியில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்கு பிறகுஅடக்கம் செய்யப்பட்டது.
விவசாயிகள் சங்கம் அஞ்சலி
தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வீ.சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் அம்பிகாபதி உள்ளிட்ட தலைவர்கள் கூறும் போது, உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழக அரசு மறு கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகள் இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர்.