தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை மற்றும் கோடை நெல் சாகுபடியாக பம்பு செட் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் நெல்மணிகளை கொண்டு வந்து ஆங்காங்கே குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர்.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையினால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நீரில் நனைந்துசேதமாகியுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் அருகே அன்னப்பன் பேட்டை, சடையார்கோவில், பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து போயின.
கொள்முதலான மூட்டைகளை அகற்றாததால்...
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொண்டு வந்து வாரக்கணக்கில் குவித்து வைத்துள்ளோம். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கியிருப்பதால், கொள்முதல் செய்யவில்லை. மேலும் மழையின் காரணமாக நெல்களில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை காயவைத்து, தூசி அகற்றிய பின்னர்தான் விற்க முடியும். கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே அகற்ற வேண்டும். மழை தொடங்கியுள்ளதால் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்றனர்.
தார்ப்பாய்கள் தேவை
இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில், நாளொன்றுக்கு 900 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம். லாரிகள் அதிகம் இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளன. இதனால் மழை பெய்யும் போது மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமாகிறது. நிர்வாகம் போதிய தார்ப்பாய்களை வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றனர்.வேளாண்மை பணிகளுக்கு விளை பொருட்களை கொண்டு செல்லவும் தடையேதும் இல்லாத நிலையில், நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கும் அரிசி அரவை ஆலைகளுக்கும் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு போதிய வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டால், இத்தகைய சேதங்களை தவிர்க்கலாமே! தமிழக வேளாண் துறையும் கூட்டுறவுத் துறையும் மாவட்ட நிர்வாகமும் செய்யுமா? விவசாயிகளை வேதனையிலிருந்து காப்பாற்றுமா?