பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடும் சாடல்
கோவை, ஜூன் 2– மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் லாபம் ஒன்றே குறிக்கோளாக கருதும் தனியார் பேருந்துகள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதனை இயக்குவதற்கான உத்தரவை போடு வதற்கு வக்கற்ற அரசாக தமிழக அரசு இருக்கிறது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சாடியுள்ளார். மத்திய அரசின் கீழ் இயங்கும் என்டிசி பஞ்சாலைகளில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தை செவ்வா யன்று கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், என்டிசி அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற னர். இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். இதில் எல்பி எப் ஆறுமுகம், ஏடிபி கோபால், எச்எம்எஸ் ராஜமணி, சிஐடியு பிரான்சிஸ் சேவியர், ஏஐடியுசி எம். ஆறுமுகம், ஐஎன்டியுசி சீனிவாசன் உள்ளிட்ட தொழிற்சங்க தலை வர்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறு கையில், தமிழகத்தில் செயல்படும் 7 என்.டி.சி மில்களுக்கான சம்பளம் பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தொழிற் சங்கம், என்.டி.சி அதிகாரிகள் முன்னி லையில் நடைபெற்றது. மே17 ஆம் தேதி வரைக்கான ஊதியத்தை முழு மையாகவும், மே 18ம் தேதி முதல் ஜூன் 7 வரை 50 சதவீத சம்பளம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால், முழு ஊதியம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக என்டிசி ஆலையை இயக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தி யுள்ளோம் என தெரிவித்தார்.
வேலையை உறுதிப்படுத்துக!
மேலும், கோவையில் துணிக் கடைகள், நகைக்கடைகள் மற்றும் ஓட்டல் திறக்கப்பட்டு வருகிறது. இதில் 400 பேர் வேலை செய்த இடத்தில் 100 பேர் மட்டும் போதும் என்று முதலாளிகள் கூறி வரு கின்றனர். மேலும் ஊரடங்குகாலத் திற்கான கடந்த 2 மாத சம்பளத்தை யும் வழங்கவில்லை. இதனால் இத்தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு ஊதியத்தை பெற்றுத் தருவதையும், வேலையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் மகிழ்ச்சி. அதே நேரத்தில் இங்கு பரிசோதனை நடத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே ஒருவருக்கு கொரோனா என்பது தெரியவந்துள்ளது. தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வதை விடுத்து பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் கொரோனா தொற்று பரவலாகிப் போனால் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். அனைவரும் சேர்ந்து இந்நோயில் இருந்து மக்களை காப்பாற்ற போரிட வேண்டும்.
சர்வாதிகாரப் போக்குடன் அமைச்சர்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பது என்பது சலுகை அல்ல. அவர்களை பலப்படுத்த, உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதற்காக அமல்படுத்தப்பட்டது. அதை ரத்து செய்வோம் என்று மத்திய அரசு சொல்வதை ஏற்கமுடியாது. இந்த விஷயத்தில் மாநில அரசு போராட வேண்டும். அப்படி செய்தால் மாநில அரசுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு இருக்கும். அதேநேரத்தில் இந்த அரசும், காவல்துறையும் திட்டமிட்டு திமுகவினர் மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகிறது. கோவை மாநகராட்சி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏன் மாநகராட்சி இணையத்தில் பதிவு செய்யவில்லை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கேட்டுள்ளார். இதற்கு வழக்கு கைது நடவடிக்கை என்றால் ஒரு சிறு கேள்வியைகூட எதிர்கொள்ள முடியாமல் நமது அமைச்சர் இருக்கிறார். நியாயமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யாத அரசு அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நேர்மாறாக நடைபெறுகிறது.
ஆகவே, உடனடியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் கைது என்று சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் அமைச்சரால் ஒரு தனியார் பேருந்தையாவது இயக்க முடிந்ததா? எடுத்ததெற்கெல்லாம் வழக்கு, கைது என்கிற இந்த அரசு பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று சொல்கிறவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவர்களுக்குள் என்ன உறவு, என்ன ஒப்பந்தம் என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. லாபம் ஒன்றே குறிக்கோளாக கருதும் தனியார் பேருந்துகள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதனை இயக்குவதற்கான உத்தரவை போடுவதற்கு வக்கற்ற அரசாக தமிழக அரசு இருக்கிறது. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.
விவசாய கூட்டமைப்பு
முன்னதாக, விவசாய கூட்டமைப்பின் சார்பில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய சூறாவளிக் காற்றால் வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மனு அளித்தனர். இதில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டாக்டர் தங்கராஜ், வழக்கறிஞர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட விவசாயிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.