tamilnadu

சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதலுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

சென்னை, மே 28-‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’சார்பில் அதன் நிர்வாகிகள் அருணன்,க.உதயகுமார் மற்றும் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அறிஞர்கள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:நாடாளுமன்றத் தேர்தலில் பாரதியஜனதா கட்சி மிகப்பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளசூழ்நிலையில், நாடு முழுவதும் சிலஇந்துத்துவா கும்பல் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது வேதனையளிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வந்த பிறகு பேசிய பிரதமர் நரேந்திரமோடி தனது அரசு யார் ஒருவர் மீதும் பாகுபாடு காட்டாது என்றும்,சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்படும்என்றும் கூறினார். ஆனால், அதற்கு மாறாக பல்வேறு சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்றும்,பசு பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொண்டும் சிலர் ஒரு பெண் உள்ளிட்ட3 முஸ்லிம்களை மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதை பலரும் வேடிக்கை பார்த்துள்ளனர். அதேபோல், குஜராத்தில் வதோதரா தொகுதிக்குட்பட்ட மஹிவத் என்ற கிராமத்தில் ஒரு தலித் தம்பதிஅங்குள்ள கோவிலில் தலித்துக்களை திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை என்று முகநூலில் பதிவுபோட்ட காரணத்திற்காக, அந்த தம்பதியின் வீட்டை சிலர் சூறையாடியதுடன் கடுமையாக தாக்கியுள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் என்ற காரணத்திற்காக, பசவன்பூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பாஜக இந்துத்துவா தேசியவாதத்தையும், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதை நினைவுகூர்வது அவசியமாகும்.நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு நடைபெற்ற பல வன்முறைசம்பவங்கள் பாஜகவின் அபாயகரமான அடிப்படைவாத அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் நாடு முழுவதும் இந்துத்துவா அடிப்படைவாத சக்திகள் கட்டவிழ்த்துள்ள இந்த தாக்குதல் சம்பவங்களை தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாக கண்டிக்கிறது.நாட்டின் மதநல்லிணக்கம் பாதிக்கின்ற வகையில் நடைபெறும் இப்படிப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறைகூவல் விடுக்கிறது.மேலும் பிரதமர் இந்த சம்பவங்கள் குறித்து மவுனம் சாதிக்காமல், மத நல்லிணக்கத்திற்கு, மக்கள் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.