திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் முதல் தமிழ்படம் இது. (தாராள பிரபு எனும் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு கொரனோ வைரஸ் காரணமாக பின்னர் இணையத்தில் வெளியிடப்பட்டது). திரைப்படங்கள் வெளியிடுவதில் இனி இணையமும் திரையரங்குகளும் மோதிக்கொள்ளுமா என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும்.
இரண்டாவது சிறப்பு மிக முக்கியமானது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் திரைப்படங்கள் மிக குறைவு. இந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருவது மட்டுமல்ல; இன்று பெண் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் தாக்குதல்கள் குறித்து மிக ஆழமாக பேசுகிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் முற்போக்காளர்கள் கொண்டாட வேண்டிய ஒன்று எனில் மிகை அல்ல.ஊட்டியில் பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். காவல்துறை சிறப்பு பிரிவுகளை உருவாக்குகிறது. புலன் விசாரணையில் ஜோதி எனும் வடநாட்டு பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு சில குழந்தைகளின் உடல்கள் கிடைக்கின்றன. பின்னர் ஜோதியை பிடிக்க காவல்துறை சென்ற பொழுது அந்த பெண் துப்பாக்கியால் சுட காவல்துறை திருப்பி சுட்டதில் ஜோதி இறக்கிறார். மருத்துவர்களின் அறிவியல் பூர்வமான அறிக்கைகள் மூலம் ஜோதியின் குற்றம் நிலைநாட்டப்படுகிறது. ஊட்டியின் மிக வெறுக்கத்தக்க பெண்ணாக ஆகிறார் ஜோதி!
\சுமார் 15 ஆண்டுகள் கழிந்து ‘பெட்டிஷன் பெத்துராஜ்’ (பாக்யராஜ்) இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் ஆணை பெறுகிறார். அவருக்காக அவரது மகள் வெண்பா வழக்கறிஞராக வாதிடுகிறார். வெண்பாவின் கதாபாத்திரத்தில் ஜோதிகா வருகிறார். தமது சுயவிளம்பரத்துக்காகவே இவர்கள் வழக்கை தோண்டி எடுக்கின்றனர் என பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் கதை நகரும் பொழுது தொடக்கத்தில் நிலைநாட்டப்பட்டதாக சொல்லப்பட்ட உண்மை சிறிது சிறிதாக தலைகீழாக மாறுகிறது.
ஒரு துப்பறியும் கதைக்கு இணையாக பல திருப்புமுனைகள் உண்டாகின்றன. பெட்டிஷன் பெத்து ராஜும் அவரது மகள் வெண்பாவும் ஏன் 15 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கை நடத்த வேண்டும்? ஜோதி எனும் வடநாட்டு பெண்ணின் வரலாறு என்ன? பணக்கார கயவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் மூலம் நாசம் செய்கின்றனர். இரண்டு குழந்தைகளும் இறந்துவிடுகின்றனரா? இப்படி பல முடிச்சுகளை கதை உருவாக்கி அவற்றை அவிழ்க்கிறது.பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கும் மன வலி என்ன என்பதை ஆழமாக பேசுகிறது இந்த திரைப்படம். அவ்வாறு விளக்கும் பொழுது நிஜத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆசிஃபா/ ஹாசினி/ நந்தினி பற்றி நீதிமன்றத்தில் பேசப்படுகிறது. பணம் இருந்தால் இந்த மகாபாதக குற்றங்களை செய்த கயவர்கள் எப்படியெல்லாம் சட்டத்தை வளைத்து அல்லது விலைக்கு வாங்கி தப்பித்துவிடுகின்றனர் என தைரியமாக கருத்து சொல்கிறது இந்த திரைப்படம். அந்த வகையில் பொன்மகள் வந்தாள் ஒரு மிக வலிமையான உள்ளடக்கம் கொண்ட கதை. இந்த உள்ளடக்கத்தை தேர்ந்தெடுத்ததற்காக இயக்குனர்/ தயாரிப்பாளர் உட்பட அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். சூர்யா போன்ற சமூக அக்கறை கொண்டவர்களால்தான் இந்த கதையை ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்த திரைப்படத்தில் சில பாராட்டப்பட வேண்டிய அழகியல் அம்சங்கள் உண்டு. ஊட்டியின் அழகை வெளிக்கொணரும் ஒளிப்பதிவு சிறப்பு! கதையில் உருவாகும் திருப்புமுனைகள் எதிர்பாராதவை! குறிப்பாக இறுதி காட்சியில் உள்ள திருப்புமுனை ஹாலிவுட் திரைப்பட பாணியில் முன்வைக்கப்பட்ட எவரும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. சாட்சி கூண்டிலிருந்து வெளியேறும் வரதராஜனை வெண்பா மிரட்டி மீண்டும் கூண்டில் ஏற்றும் காட்சி டாம்குரூஸ் எனும் ஹாலிவுட் நடிகருக்கு புகழ் தேடி தந்த ‘Few Good Men’ எனும் ஆங்கில திரைப்படத்தை தழுவியது என்றாலும் ஒரு அழுத்தமான காட்சி என்பதை மறுக்க இயலாது.
எனினும் சில அழகியல் அம்சங்களில் பொன்மகள் வந்தாள் இன்னும் சிறப்பாக பரிணமித்திருக்க முடியும். ஒரு துப்பறியும் கதையைவிட மிக விறுவிறுப்பாக ஜெட் வேகத்தில் சென்று பார்வையாளர்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு அதிகப்படுத்துவதற்கான அனைத்து உட்கூறுகள் இந்த கதையில் உள்ளது. விறுவிறுப்பு உருவானாலும் அது முழுமையாக பரிணமிக்கவில்லை. இந்த பலவீனம்தான் ஜோதிகா/பாக்யராஜ்/ பார்த்திபன்/ பிரதாப் போத்தன் ஆகியோரின் சிறந்த நடிப்பின் முழு பலன் போதிய அளவுக்கு மிளிர்வதில் சுணக்கத்தை உருவாக்குகிறது.
நீதிமன்ற காட்சிகள் சில சமயங்களில் நாடகபாணியை நினைவூட்டுகின்றன. இறுதி காட்சியில் நீதிமன்றத்தில் சட்டத்தின் அடிப்படையிலான வாதங்களுக்கு பதிலாக உணர்ச்சிகள் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. உணர்ச்சிகள் அடிப்படையில் எப்படி தீர்ப்புகள் வழங்குவது எனும் நியாயமான கேள்வியை நீதிபதி எழுப்புகிறார். அதற்கு வெண்பாவிடம் எந்த பதிலும் இல்லை. உண்மையில் வெண்பா தனது தோல்வியை ஏற்றுகொள்கிறார். ஆனால் நீதிபதிதான் வழக்கிற்கு மறு உயிர் அளிக்கிறார். இந்தியில் வெளிவந்த ‘பிங்க்’ மற்றும் அதன் தமிழ் தழுவல் ‘நேர்கொண்ட பார்வை’ அல்லது ‘Few Good Men’ போன்ற திரைப்படங்கள் போல நீதிமன்ற வாதங்களை இன்னும் சிறப்பாக அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வரதராஜனின் கதாபாத்திரம் அதில் வெளிப்படுத்தப்பட்ட நடிப்பு இரண்டும் இன்னும் காத்திரமாக அமைந்திருக்க வேண்டும். இந்த கதாபாத்திரத்தின் எதிர்மறை அம்சம் வெண்பாவின் நேர்மறை அம்சத்தை இன்னும் பன்மடங்கு உயர்த்தி இருக்கும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திரைப்படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் அது ஒரு தவறான கோணத்தில் முன்வைக்கப்படுகிறது. இப்பொழுது இயக்குனர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தை சாமானியர்கள் பார்க்க இயலுமா எனும் கவலையும் உள்ளது.
எனினும் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஒரு மிக முக்கிய பிரச்சனையான குழந்தைகள் சந்திக்கும் பாலியல் தாக்குதல்கள் குறித்து இந்த திரைப்படம் உரக்க பேசுகிறது. சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப முயல்கிறது. அந்த வகையில் இது கண்டிப்பாக ஆதரிக்கப்பட வேண்டிய திரைப்படம் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்க முடியாது.