articles

img

சூது கவ்வும்... தர்மம் மறுபடி வெல்லும்....

ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 26 அன்று தில்லியின் மூன்று திசைகளிலிருந்து விவசாயிகள் பேரணி புறப்பட்டது. வட திசையில் இருந்து சிங்கு எல்லை. இந்தப் பகுதியில் பெரும்பாலும் பஞ்சாப் விவசாயிகள் இருந்தனர். மேற்கு திசையிலிருந்து திக்ரி எல்லை. இந்தப் பகுதியில் பெரும்பாலும் ஹரியானா விவசாயிகள் இருந்தனர். தென்கிழக்கு திசையிலிருந்து காஸிப்பூர் பகுதி. இங்கு பெரும்பாலும் மேற்கு உத்தரப்பிரதேச மற்றும் உத்தரகண்ட் விவசாயிகள் இருந்தனர். மூன்று பகுதிகளிலும் ராஜஸ்தான்/மத்தியப் பிரதேசம்/கேரளா/கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்து இருந்தனர். பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தில்லி காவல் துறையும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் பேரணிக்கு மூன்று பாதைகளை தேர்ந்து எடுத்தனர். மேலும் அரசு குடியரசு தின விழா முடிந்த பிறகுவிவசாயிகள் பேரணி தொடங்கும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

திக்ரி எல்லையில் இருந்து பேரணி சுமார் பத்து மணிக்கு கிளம்பியது. டிராக்டர்கள் முண்ட்கா எனும் இடத்தை அடைந்தபொழுது ஏராளமான பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நின்று விவசாயிகளை வாழ்த்தினர். “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என  முழக்கமிட்டனர். குடிநீர்/பிஸ்கட் மற்றும் உணவுகள் கொடுத்து விவசாயிகளுக்கு மக்கள் உதவினர். மலர்கள் தூவி வாழ்த்தினர். அங்கு குடியிருந்த ஏராளமான பீகார்/உத்தரப்பிரதேச இடம் பெயர் தொழிலாளர்களும் உற்சாகத்துடன் பேரணியில் இணைந்தனர். அவர்களில் பலர் சொந்த ஊரில் விவசாயம் செய்பவர்கள். சுமார் 12.10 மணிக்கு இந்த பேரணி நஜஃப்கார் என்ற இடத்தை அடைந்தபொழுது அங்கு ஏராளமான தடுப்புகள் காவல்துறையினரால் போடப்பட்டிருந்தன. ஏற்கனவே ஏற்றுக்கொண்ட பாதையில் செல்வதற்கு ஏன் தடுப்புகள் போடப்படவேண்டும்? எனவே விவசாயிகள் தடுப்புகளை அகற்றுமாறு காவல்துறையினரிடம் வேண்டினர். அவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே விவசாயிகள் தமது டிராக்டர்கள் மூலம் தடுப்புகளை அகற்றமுயன்றனர். அப்போது காவல்துறையினர் டிராக்டர் டயர்களின் காற்றை பிடுங்கி விட்டனர்; தடியடி நடத்தினர்; கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 20 சுற்றுகள் கண்ணீர்புகை குண்டு வீச்சு நடைபெற்றது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த பகுதியில் தேவையில்லாமல் காவல்துறையினர் விவசாயிகள் மீது வன்முறை ஏவினர்.

இதே போல சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட பேரணியும் பல தடுப்புகளை சந்திக்க வேண்டி வந்தது. ஆங்காங்கே சில தள்ளுமுள்ளுகள் நடைபெற்றன.  எனினும் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்ற இந்த பேரணி கட்டுப்பாடுடன் நடந்தேறியது. காஸிப்பூர் பகுதியிலிருந்து வந்த பேரணியில் ஏராளமான டிராக்டர்கள் மட்டுமல்லாது கால்நடையாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்தனர். இந்த பேரணியில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கேஎம்எஸ்சி) அமைப்பினரும் பங்கேற்றனர்.

25.01.2021  இரவு நடந்தது என்ன?
காஸிப்பூர் பகுதியில் 25.01.2021 அன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் பேரணி குறித்த திட்டங்களை வழக்கம் போல அங்கிருந்த மேடையில் அறிவித்தனர். விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அன்றுஇரவு அந்த மேடையை ஆக்கிரமித்த கேஎம்எஸ்சி அமைப்பினர், மோர்ச்சாவின் திட்டங்களை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்தனர். அரசாங்கம் சொன்ன பாதைகளில் மட்டுமே பேரணி நடத்துவது தங்களுக்கு ஏற்புடையது இல்லை எனவும் தங்களது திட்டம் தில்லி நகரத்தின் மையப்பகுதிக்கு செல்வது எனவும் அறிவித்தனர். தில்லிமையப்பகுதிக்கு செல்வது என்பதுதான் மோடி அரசாங்கத்துக்கு பாடத்தை கற்றுகொடுக்க முடியும் எனவும் ‘முழங்கினர்’. அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உணரவில்லை;அல்லது விளைவுகளை மறைத்தனர் என்றுதான் கூற வேண்டும்.

அந்த மேடையில் உரையாற்றிய மேலும் இருவர் பற்றி குறிப்பிடுவது அவசியம். ஒருவர் தீப் சித்து என்பவர்.மற்றொருவர் லக்பீர் சிங் சிதானா. தீப் சித்து திரைப்பட கலைஞர். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க. சார்பாக பஞ்சாபில் குர்தாஸ்பூர் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட பொழுது அவருக்கு தேர்தல் முகவராக பணியாற்றியவர் தீப் சித்து. சன்னி தியோலின் தந்தை புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திரா என்பதும், தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி என்பதும் கூடுதல் செய்தி. தீப் சித்து மோடியுடனும் அமித்ஷாவுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லக்பீர் சிங் சிதானா பிரபல தாதாவாக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் பேரணிப் பாதையை சம்யுக்த கிசான் மோர்ச்சா ஏற்றுக்கொண்டதை விமர்சித்தனர். கேஎம்எஸ்சி தில்லி நகருக்குள் செல்ல முடிவு எடுத்திருப்பதால் யாரெல்லாம் விரும்புகின்றனரோ அவர்கள் உடன் வரலாம் என  அறிவித்தனர். அந்த கூட்டத்தில் கணிசமான இளைஞர்களும் மாணவர்களும் இருந்தனர். இந்த கருத்து ஒரு பிரிவு விவசாயிகளுக்கு குறிப்பாக, இளம் வயதினருக்கு ஒரு தூண்டுதலை அளித்தது என்பது கசப்பானது. 

நாங்க்லி முச்சந்தியின் முக்கியத்துவம்
காஸிப்பூர் பேரணியின் பாதையில் நாங்க்லி எனும் இடத்தில் உள்ள முச்சந்தி முக்கியமானது ஆகும்.  இந்த சந்திப்பு அருகே வரும் பேரணி வலது பக்கம் திரும்பி செல்லவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம். நேராக சென்றால் புகழ்பெற்ற அக்சர்தாம் கோவிலும் இடது பக்கம் சென்றால் தில்லி வெளி சுற்றுப்பாதையும் அதன் வழியாக தில்லி நகரத்துக்குள் செல்லும் பாதையும் உள்ளது. எனவே இந்த இடத்தில் சம்யுக்தா மோர்ச்சாவின் முக்கிய தலைவர்கள் நின்று கொண்டு பேரணியை வலது பக்கம் செல்ல அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். பெரும்பாலான டிராக்டர்கள் திட்டமிட்ட பாதையில் சென்றன. எனினும் ஒரு சிலர் இடது பக்கம் செல்ல முயன்றனர். அவர்களை மோர்ச்சா தலைவர்கள் தடுத்தனர். அறிவுரை கூறினர். ஒரு கட்டத்தில் மீறியவர்களை மோர்ச்சா ஊழியர்களே தடியடிநடத்தி ஒழுங்குபடுத்தினர். 

எனினும் கேஎம்எஸ்சி ஊழியர்கள் மோர்ச்சா தலைவர்களின் வழிகாட்டுதலை மீறி தடுப்புகளை உடைத்துக் கொண்டு இடது பக்கம் சென்றனர். அதனை தொடர்ந்து பேரணியின் ஒரு பிரிவினர் அவர்கள் பின்னால் சென்றனர். அங்கு ஏராளமான காவல்துறையினர் இருந்தனர். தண்ணீர் பீய்ச்சி தடுக்கும் வாகனங்கள் இருந்தன. துணை இராணுவத்தினரும் இருந்தனர். ஆனாலும் கேஎம்எஸ்சி ஊழியர்கள் தடுக்கப்படவில்லை. சிறிய தள்ளுமுள்ளுக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏன்? இந்த கேள்வியின் பதிலில் பல உண்மைகள் அடங்கியுள்ளன.

இந்த பகுதியினர் விரைவில் ஐ.டி.ஓ எனும் வருமானவரிஅலுவலகப் பகுதிக்கு வந்தடைந்தனர். அங்கு காவல்துறையினருக்கும் இவர்களுக்கும் மோதல் உருவானது. அங்குதான் ஒரு விவசாயி உயிரிழந்தார். கண்ணீர் புகைகுண்டு அவர்மீது விழுந்ததால் அவர் ஓட்டிய டிராக்டர் கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்ததில் அவர் மரணம் அடைந்தார் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினரோ டிராக்டர் கவிழ்ந்ததால்தான் அவர் மரணம் அடைந்தார் எனசாதிக்கின்றனர். இந்த பகுதியில் தடியடியும் கண்ணீர்புகை வீச்சும் நடந்தன. அதனை மீறி இந்த பகுதி செங்கோட்டைக்கு வந்தடைந்தது.

செங்கோட்டை நிகழ்வுகள்
விவசாயிகளின் ஒரு பிரிவினர் செங்கோட்டை பகுதிக்கு வந்தடைந்த பொழுது பல இடங்களில் காவல்துறையினரின் வன்முறை செயல்கள் அவர்களுக்கு தெரிந்தன. இயற்கையிலேயே இது கடும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விளைவித்தது. எனினும் அங்குவந்த பெரும்பாலான டிராக்டர்கள் செங்கோட்டையை ஒரு சுற்று சுற்றிவிட்டு எல்லைப்பகுதிகளுக்கு திரும்பி சென்றன. ஒரு பகுதியினர் மட்டும் செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அவ்வாறு செங்கோட்டைக்குள் நுழைந்தவர்களிடையே தீப்சித்து இருந்தார் என்பது மிக முக்கியமானது. தீப் சித்துவின் தூண்டுதலில் செங்கோட்டைக்குள் நுழைந்த அவர்கள் அங்குள்ள பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். அங்கு இருந்தஒரு கொடிக் கம்பத்தில் சீக்கியர்கள் புனிதமாக கருதும் “நிஷாந்த் சாஹேப்” எனும் கொடியையும் விவசாய சங்கத்தின் கொடியையும் தீப் சித்து ஏற்றவைத்தார்.

மோடி - அமித்ஷாவின் கைக்கூலியான தீப் சித்து இத்தகைய சதிச் செயலைச் செய்ய, மறுபுறம், இந்திய தேசிய கொடியை இறக்கிவிட்டு இந்த கொடிகள் ஏற்றப்பட்டன என பல ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்தன.செங்கோட்டையின் உச்சியில் இருந்த தேசிய கொடியை எவரும் தொடவில்லை. அதற்கு கீழே கொடியில்லாமல் இருந்த கம்பத்தில் “நிஷாந்த் சாஹேப்”  கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை காலிஸ்தான் கொடி எனவும் ஊடகங்கள் திட்டமிட்டபடி புளுகின. சீக்கியர்கள் புனிதமாக கருதும் இந்த கொடி அனைத்து குருத்துவாராக்களிலும் பறக்கும். இந்த கொடிக்கும் காலிஸ்தான் கருத்தியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

இந்நிலையில், செங்கோட்டை பகுதிக்கு வந்தடைந்த பல மூத்த சீக்கியர்கள், இளைஞர்களை கடிந்துகொண்டனர் என அங்கு நேரடியாக இருந்த குவிண்ட் இணைய இதழ் நிருபர் தெரிவிக்கிறார். இவர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு களங்கம் விளைவிப்பதாகவும் உடனடியாக செங்கோட்டையிலிருந்து வெளியேறுமாறும் மூத்த சீக்கியர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அங்கிருந்த காவல்துறையினரிடமும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக பெரும்பகுதியினர்  வெளியேறினர். எனினும் செங்கோட்டைக்குள் ஒரு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் மோதல் உருவானது. போராட்டக்காரர்களின் ஆவேசத்திலிருந்து தப்பிக்க பல காவலர்கள் சுவர் ஏறி குதிக்க வேண்டிய
தாயிற்று. இதில் பலர் காயமடைந்தனர்.  26.01.2021 மாலை செங்கோட்டையிலிருந்து அனைத்து போராட்டக்காரர்களும் வெளியேறினர்.

இனி என்ன?
பேரணியில் சுமார் ஒரு இலட்சம் டிராக்டர்கள் பங்கேற்றன. 95% பேரணி அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் நடந்தேறியது. தில்லியில் மட்டுமல்லாது 22 மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம்/கேரளா/மகாராஷ்டிரா/மேற்கு வங்கம்/கர்நாடகா/ஆந்திரா/தெலுங்கானா ஆகியமாநிலங்களில் வீரியமிக்க போராட்டங்கள் நடந்துள்ளன. எனினும் அரசு ஆதரவு ஊடகங்களும் மோடி அரசாங்கமும் நடந்த சில தவறுகளை மையமாக கொண்டு பேரணி முழுவதும் வன்முறையில் திளைத்தது என கருத்தாக்கம் உருவாக்க முயல்கின்றன. அதன் அடிப்படையில் போராட்டத்தை சிதைக்க முயல்கின்றனர். ஏற்கெனவே 22 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யோகேந்திர யாதவ்/ராகேஷ்சிங் திகாயத் ஆகியோர் மீதும்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் விநோதமான ஒன்றுஎன்னவென்றால் தீப் சித்துவோ அல்லது லக்பீர் சிதானாவோ இந்த நிமிடம்வரை கைது செய்யப்படவில்லை. இது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட ஒன்றா?

கட்டுரையாளர் : அ.அன்வர் உசேன்