tamilnadu

img

அவதூறு பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையரிடம் மாதர் சங்கம் புகார்

மாதர் சங்கம், பெண்கள் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புகார் அளித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாதர் சங்கம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் சுப்புலட்சுமியிடம் புதனன்று (ஜூலை 16) மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா புகார் அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெண்கள் குறித்து பொதுவெளியில் சீமான் தொடர்ந்து ஆபாசமாக, கண்ணியக்குறைவாக, பிற்போக்காக பேசி வருகிறார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யா மரணத்திற்கு போராடாமல் மாதர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், முற்போக்காளர்கள் எங்கே சென்றார்கள்? பலப் பிரச்சனைக்கு போராட்டம் நடத்தும் மாதர் சங்கம் கொகையின், கஞ்சா, மது அருந்திவிட்டு மயக்கத்தில் உள்ளதா?” என்று கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணை ஏமாற்றிய விவகாரத்தில் சீமான் மீது மாதர் சங்கம் புகார் அளித்தது. அதன் பிறகு அரசியலில் தலைமை தாங்க ஆண்மகன் தான் வரவேண்டும் என பிற்போக்கான கருத்தை சொன்னார். அவரது கட்சியில் உள்ள பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? சீமான், நிறைய பேசுவார் ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தார் என்பதை ஒரு போதும் பேசியது இல்லை.

ரிதன்யா இறந்தபோது மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா மற்றும் மாவட்ட தலைவர்கள், அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அதற்கு அடுத்த நாள் திருப்பூரில் மாதர் சங்கம் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியது. மாதர் சங்கத்தை கேள்வி கேட்கும் இந்த துயர நிகழ்வு நடந்தபோது சீமான் எங்கே சென்றார்? ரிதன்யாவுக்காக போராடினாரா? வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுத்தாரா? சீமான் பேசுவது அத்தனையும் பிற்போக்கு ஆணாதிக்க சிந்தனை. தமிழ்நாட்டில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும், அவதூறு பரப்பும் செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

சீமான் பேசும் பிற்போக்கான கருத்துக்கள் ஊடகங்களில் பரவி வருகிறது. எனவே, தொலைதொடர்பு சாதனங்கள், சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசுவதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு வீடியோவில், தனது மனைவியை அவரது அம்மாவிடம் 85 ஏக்கர் நிலத்தை கேட்க சொல்கிறார். அதற்காகவே அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிய வேண்டும்.

மாதர் சங்கத்தை விமர்சிக்க சீமானுக்கு ஒரு சதவீதம் கூட தகுதி கிடையாது. சீமானை கண்டித்து மாநிலம் முழுவதும் மாதர் சங்கமும், அனைத்து பெண்கள் கூட்டமைப்போடு இணைந்து வலுவான போராட்டத்தை நடத்தும்.

இந்நிகழ்வின்போது மாநில பொருளாளர் பிரமிளா, மாவட்டச் செயலாளர்கள் பாக்கியம் (வடசென்னை) ம.சித்திரகலா (தென்சென்னை), வெ.தனலட்சுமி (மத்திய சென்னை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்